EBM News Tamil
Leading News Portal in Tamil

மகளிர் குழுவுக்கான கடன்களை மேம்படுத்த வேண்டும்: வங்கிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல் | Loans for womens groups should be improved


‘‘சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை வங்கிகள் இன்னும் மேம்படுத்த வேண்டும்’’ என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

தமிழ்நாட்டுக்கான 180-வது மாநில அளவிலான வங்கிகள் குழு (எஸ்எல்பிசி) கூட்டத்தை, அதன் ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னையில் நடத்தியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:

கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை 127.28 சதவீதம் கடன் டெபாசிட் விகிதத்தை எட்டியதற்காக வங்கிகளுக்கு பாராட்டுக்கள். மேலும், நிதியாண்டு 2024-25-ன் 2-வது காலாண்டின்போது வருடாந்திர கடன் திட்ட இலக்கில் 51.39 சதவீதம் எட்டப்பட்டிருப்பதற்கும் வாழ்த்துக்கள். அனைத்து தரப்பு மக்களும் அரசின் திட்டங்களின் பலன்களைப் பெற்று முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற குறிக்கோளில், மாநில அரசின் கலைஞர் கைவினை திட்டம் மற்றும் கலைஞரின் கனவு இல்லம் போன்ற மாநில அரசின் புதுமையான திட்டங்கள், 2024-ம் ஆண்டில் வெற்றிகரமாக தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வங்கிகள் வழங்கி இருக்கும் மொத்த கடன்களில் பெண்களுக்கான கடன் 20.09 சதவீதம் உள்ளது. சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை வங்கிகள் இன்னும் மேம்படுத்த வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில அளவிலான வங்கிகள் குழு ஒருங்கிணைப்பாளரான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் பொது மேலாளர் ரியாஸ் உல் ஹக், கூட்ட நிகழ்வின் முக்கிய அம்சங்களை விவரித்துக் கூறினார். விவசாயம், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள், கல்விக் கடன்கள், வீட்டுக் கடன்கள், பெண் கடன்தாரர்கள், நலிவுற்ற பிரிவுகள், சிறுபான்மையினர் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் உட்பட, முன்னுரிமைப் பிரிவினருக்கான கடன் வழங்கல் குறித்து முக்கியமான விவாதங்கள் நடைபெற்றன.

இக்கூட்டத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநர் தனராஜ்.டி, நிதித்துறை செயலர் டி. உதயச் சந்திரன், இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமா சங்கர், நபார்டு வங்கியின் முதன்மை பொது மேலாளர் ஆர்.ஆனந்த், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அரசு செயலர்கள் மற்றும் துறைத் தலைவர்கள், ரிர்வ் வங்கி, நபார்டு மற்றும் வங்கிகளின் முதுநிலை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட முதன்மை மேலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.