வீட்டில் தூசு படியாமல் இருக்க செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்! | Dos and Dont dos for dust free home
வீட்டில் தூசு சேராமல் பார்த்துக் கொள்வது என்பது கடினமான வேலைகளில் ஒன்று. வீட்டின் பலவிதமான பொருட்களில் வெளிப்படையாகவும் மறைந்தும் இருக்கும் தூசு, உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய அளவுக்கு ஆபத்தானது. சரியான பராமரிப்பு முறைகளைக் கையாண்டால், வீட்டில் தூசு சேர்வதைக் கட்டுப்படுத்த முடியும். தூசு படியாமல் இருப்பதற்கான சில வழிகள் இங்கே…
வழக்கமான சுத்தப்படுத்துதல்: தூசு இல்லாமல் வீட்டைப் பராமரிக்க வேண்டுமென்றால் தினசரி எதோவொரு வகையில் சுத்தப்படுத்துவதை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருமுறையாவது தரையைத் துடைப்பான் வைத்துச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்குத் தண்ணீரைப் பயன்படுத்துவது நல்லது. அத்துடன், பொருட்களில் தூசுவை நீக்க ‘மைக்ரோஃபைபர்’ துணியைப் பயன்படுத்தலாம்.
வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்த்தால் அவற்றின் முடிகளையும், தோளையும் சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை, தேவையில்லாத பொருட்களை வீட்டில் இருந்து அகற்றிவிடுவதுக் குப்பைகளும் தூசுவும் சேர்வதைத் தடுக்க உதவும். உங்களுடைய வீடு தூசு அதிகமாகப் படியும்படி சாலைப் பகுதிகளில் இருந்தால் காலை நேரத்தில் மட்டும் ஜன்னல்களைத் திறந்துவைத்துவிட்டு, மற்ற நேரத்தில் அவற்றை மூடிவைத்துவிடலாம்.
பெரும்பாலும் ஷூ-ஸ்டாண்டை வீட்டுக்கு வெளியே வைப்பது நல்லது. இதனால் வெளியிலிருந்து காலணிகள் வழியாக வீட்டுக்குள் வரும் தூசுவைக் கட்டுப்படுத்தலாம். அத்துடன், வீட்டு வாசலில் கனமான ஃபைபர் மிதியடியைப் போட்டு வைக்கலாம். இந்த மிதியடியை வாரத்துக்கு ஒரு நாள் சுத்தப்படுத்துவதை வழக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தரைவிரிப்புகள் நல்லதல்ல: வீட்டில் அழகுக்காகப் போடப்படும் தரைவிரிப்புகள் தூசு உற்பத்தியாவதற்கான முக்கியக் காரணமாக இருக்கின்றன. ஒருவேளை, தரை விரிப்பு பயன்பாட்டைத் தடுக்கமுடியவில்லையென்றால், அவற்றைத் தினமும் வேக்யூம் கிளினரால் சுத்தப்படுத்துவது நல்லது. ஒரு மாதத்துக்கு ஒரு முறையாவது தரைவிரிப்பை அகற்றிவிட்டுத் தரையைச் சுத்தப்படுத்த வேண்டும்.
அதிகமான பொருட்கள் வேண்டாம்: வீட்டில் தூசு சேர்வதைக் குறைக்க வேண்டுமானால் தேவையில்லாத பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதிகமான அறைக்கலன்கள், அலங்காரப் பொருட்கள் போன்றவை வீட்டின் மூலைகளை ஆக்கிரமிக்கும்போது இயல்பாகவே தூசு படியும். அத்துடன் பழைய பத்திரிகைகள், செய்தித்தாள்களைச் சேர்த்துவைப்பதைத் தவிர்க்கவும். குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றை அகற்றிவிடுவது நல்லது. ‘சாஃப்ட் டாய்ஸ்’ எனப்படும் மென்மையான பொம்மைகளில் தூசு அதிகமாகப் படியும். அவற்றைக் குழந்தைகள் வைத்து விளையாடுவது நல்லதல்ல. அதனால், மென்மையான பொம்மைகள் வாங்குவதையும் தவிர்க்கலாம்.
காற்று சுத்திகரிப்பான்கள்: எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மாசு எல்லா இடங்களிலும் அதிகரித்திருக்கிறது. உங்களுடைய வீடு அதிகமான மாசுத் தொல்லை இருக்கும் இடத்தில் அமைந்திருந்தால் காற்று சுத்திகரிப்பான்கள் (air purifiers) அமைப்பது நல்லது. உங்களுடைய சுற்றுப்புறத்தில் இருக்கும் காற்று மாசுக்களை வீட்டுக்குள் வராமல் இந்தச் சுத்திகரிப்பான்கள் தடுக்கின்றன.
படுக்கை விரிப்புகளும் இருக்கை உறைகளும்: படுக்கை விரிப்புகளையும், தலையணை, இருக்கை உறைகளையும் இரண்டு வாரத்துக்கு ஒருமுறையாவது கட்டாயமாகச் சுத்தப்படுத்த வேண்டும். கனமான படுக்கை விரிப்புகளை அவ்வளவு எளிதில் துவைக்க முடியாது. அதனால், அவற்றைக் குறிப்பிட்ட இடைவெளியில் சூரிய வெளிச்சத்தில் காயவைத்துப் பயன்படுத்தலாம். இது மெத்தைகளுக்கும் பொருந்தும்.
இரண்டு மாதத்துக்கு ஒரு முறை மெத்தைகளை வெயிலில் காயவைப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இருக்கை உறைகள், குஷன்கள், திரைச்சீலைகள் போன்றவற்றைச் சுத்தப்படுத்தாமல் விட்டால் அவற்றில் அதிகமாக தூசு படிந்துவிடும். அதனால் அவற்றைக் குறைந்தது மூன்று மாதத்துக்கு ஒருமுறை சுத்தப்படுத்திவிடவேண்டும்.
தூசி அகற்றுதல்: வீட்டின் மூலைகளிலும், அறைக்கலன்களுக்கு அடியிலும் படிந்திருக்கும் தூசியை ‘வேக்யூம் கிளினர்’ வைத்துச் சுத்தப்படுத்தலாம். இந்த ‘வேக்யூம் கிளினரை’ தேர்ந்தெடுக்கும்போது அதில் உயர் திறன்மிக்க துகள் நீக்கும் ஃபில்டர்கள்( HEPA filters) இருக்கிறதா என்பதை விசாரித்து வாங்கவும். – கனி