திருவண்ணாமலை தீபம் குறியீட்டுடன் ஊத்தங்கரை அருகே கல்வெட்டு கண்டுபிடிப்பு | Inscription discovered with the symbol of Tiruvannamalai Deepam near Uthankarai
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே முதல்முறையாக திருவண்ணாமலை மலை தீபம் குறியீட்டுடன் 3 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் புதிய கல்வெட்டு உள்ளதாக ஆசிரியர்கள் வெங்கடேசன், செந்தில் ஆகியோர் கொடுத்த தகவலின்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, ஊத்தங்கரை ஒன்றியம் கானம்பட்டி இருசங்கு குட்டை என்ற இடத்தில், பெரிய பாறையின் மேற்பகுதியில், 3 இடங்களில் கல்வெட்டு மற்றும் குறியீடுகள் இருப்பதை கண்டு அதை படியெடுத்தது.
இது குறித்து கிருஷ்ணகிரி காப்பாட்சியர் சிவக்குமார், ஓய்வு பெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் ஆகியோர் கூறியது: “கிருஷ்ணகிரியில், முதன் முறையாக கல்வெட்டுகளில் உள்ள குறியீடுகளில், திருவண்ணாமலையின் முக்கோண குறியீடு உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திருவண்ணாமலை மீது தீபம் ஏற்றப்படுவதை குறிக்கிறது. இதனுடன் கோபுரம், சூரியன், சந்திரன், வாள் போன்ற குறியீடுகளும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
முதல் கல்வெட்டில், மகதை மண்டலத்தை சேர்ந்த ஏமாடு பனையதம்பாள் மற்றும் பெரிய செல்வி இருவரும், மணல் மற்றும் பூமி இருக்கும் வரை இருப்பார்கள் எனவும், அவர்களின் நினைவாக இலக்கியன் என்பவர் குறித்துள்ளார். கல்வெட்டின் இறுதில் இப்படிக்கு இலக்கியன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2-ம் கல்வெட்டில், அண்ணாமலை என்ற திருவண்ணாமலை என்பவரின் வயது 77 என குறிப்பிடப்பட்டுள்ளது. 3-ம் கல்வெட்டில் வன்நெஞ்சப்பெரும் சானார் என்ற வீரரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இம்மூன்று கல்வெட்டுகளும், 17-ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்தவை. இந்த ஊர் பழங்கால பெருவழியில் அமைந்திருக்க வேண்டும்.
தொலை துாரத்தில் இருந்து இவ்வழியாக திருவண்ணாமலைக்கு சென்ற பக்தர்கள் இக்கல்வெட்டுகளை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு முன் திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அடுத்த சி.ஆண்டாப்பட்டு உள்ளிட்ட சில கல்வெட்டுகளிலும், திருவண்ணாமலையின் முக்கோணகுறியீடு உள்ளது குறிப்பிடத்தக்கது” என்று அவர்கள் கூறினார்கள்.