EBM News Tamil
Leading News Portal in Tamil

‘ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நாமினி’ – மக்களவையில் ‘வங்கி திருத்த மசோதா’ நிறைவேற்றம் | Lok Sabha passes Banking Laws Bill allowing four nominees in bank accounts


புதுடெல்லி: மக்களவையில் ‘வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024’ குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த மசோதா வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

கடந்த மழைக்கால கூட்டத்தொடரின்போது ஆகஸ்ட் 9-ம் தேதி வங்கி சட்டங்கள் (திருத்தம்) மசோதா 2024, மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை தற்போதைய குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டது. அதன்படி, மசோதாவை அறிமுகம் செய்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் செவ்வாய்க்கிழமை பேசினார்.

அப்போது, “வங்கி திருத்த மசோதா வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்தும். அதோடு வங்கிகளின் நிர்வாகத்தையும் மேம்படுத்தும். முதலீட்டாளர்களின் முதலீடுகளுக்கு பாதுகாப்பு வழங்கும். ரிசர்வ் வங்கி சட்டம் 1944-ல் முக்கிய திருத்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதேபோல வங்கி சீர்திருத்த சட்டம் 1949-ல் 12 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. எஸ்பிஐ சட்டம் 1955-ல் இரு திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக மசோதாவில் 19 முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

புதிய மசோதாவின்படி ஒரு வங்கிக் கணக்குக்கு 4 நியமனதாரர்களை (நாமினி) நியமிக்க முடியும். அறிக்கையிடல் காலக்கெடு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி மற்றும் கடைசி நாளுக்கு மாற்றப்படும். கூட்டுறவு வங்கிகளில் முழுநேர இயக்குநர்களின் பதவிக் காலம் 8 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும். தணிக்கையாளர்களுக்கான ஊதியத்தை வங்கி நிர்வாகங்களே முடிவு செய்து கொள்ளலாம்” என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அதன்பின், குரல் வாக்கெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.