EBM News Tamil
Leading News Portal in Tamil

Exit Poll Results: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட்டில் முந்துகிறது பாஜக கூட்டணி! | Maharashtra and Jharkhand Exit Poll Results 2024


மும்பை: மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மகாராஷ்டிராவின் புதன்கிழமை நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவையில், மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101, சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 95, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 86 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஜார்க்கண்ட் மாநில தேர்தல் களத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது.

இரு மாநிலத் தேர்தலும் முடிவடைந்த பிறகு, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாயின. ‘மேட்ரிஸ்’ மற்றும் ‘பீப்புள்ஸ் பல்ஸ்’ உட்பட பல நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் வெற்றி வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பி-மார்க் மற்றும் லோக்‌ஷாகி மராத்தி – ருத்ரா என்ற நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி தொங்கு சட்டசபை ஏற்படும் சூழல் உள்ளது.

பி-மார்க் கருத்து கணிப்பில் மகாயுதி 137 முதல் 157 இடங்களையும், மகாயுதி 126 முதல் 146 இடங்களையும் கைப்பற்றும் எனவும், லோக்‌ஷாகி மராத்தி – ருத்ரா கருத்து கணிப்பில் மகாயுதி 128 முதல் 142 இடங்களையும், மகா விகாஸ் கூட்டணி 125 முதல் 140 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது. இதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்திலும் பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.