EBM News Tamil
Leading News Portal in Tamil

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் | Elon Musk’s SpaceX launches ISRO’s communication satellite GSAT-N2 into space


கேப் கானவெரல்: இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

விண்வெளி துறையில் தனக்கென தனி முத்திரை பதித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. இவை அனைத்துமே ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவப்பட்டு வந்தன.

இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சி, விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புதல் உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் மட்டுமல்லாது தனியார் நிறுவனங்களோடும் இஸ்ரோ ஒப்பந்தம் செய்து இயங்குகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 (Falcon 9_ ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் – என்2 விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இன்று (நவ.19) அதிகாலை 12.01 மணியளவில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்த செயற்கைக்கோள் 4700 கிலோ எடை கொண்டது என்பது கவனிக்கத்தக்கது.

இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் வர்த்தக பிரிவான நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் தலைவரும், நிர்வாக மேலாளருமான ராதாகிருஷ்ணன் துரைராஜ், ஜிசாட்-என் 2 செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டதை உறுதி செய்தார்.