அரசின் பாதுகாப்பு விதிகளை ஏற்ற மஸ்கின் ஸ்டார்லிங்க் – விரைவில் இந்தியாவில் அறிமுகம் | Musk s internet firm Starlink agrees to meet indian government safety norms
புதுடெல்லி: இந்திய அரசின் பாதுகாப்பு விதிமுறைகளை எலான் மஸ்கின் சாட்டிலைட் இன்டர்நெட் நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொலைத்தொடர்புத் துறையுடன் ஸ்டார்லிங்க் பலமுறை மேற்கொண்ட ஆலோசனை கூட்டம் இதற்கு வழிவகை செய்துள்ளது. செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவை உரிமத்தை வழங்குவதற்கான முக்கிய பாதுகாப்பு வழிகாட்டுதல் சார்ந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க ஸ்டார்லிங்க் ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பான ஒப்பந்த அறிக்கையை ஸ்டார்லிங்க் நிறுவனம் முறைப்படி வழங்க வேண்டியுள்ளது. கடந்த 2022-ல் இந்த உரிமம் கோரி ஸ்டார்லிங்க் விண்ணப்பித்திருந்தது.
டேட்டா லோக்கலைசேஷன் என்பது இந்த விதிகளில் முக்கியமானது. அதை ஸ்டார்லிங்க் ஏற்றுள்ளது. அதாவது சாட்டிலைட் இணையதள சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் தங்கள் நிறுவன பயனர் தரவுகளை இந்தியாவிற்குள் மட்டுமே சேமித்து வைக்க வேண்டும். மேலும், விசாரணை அமைப்புகளுக்கு அது தேவைப்படும் போது வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ஸ்டார்லிங்க் ஏற்றுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்குவது குறித்து டிராய் அமைப்பு பேசி வருவதாக செவ்வாய்க்கிழமை அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். அரசின் அனைத்து விதிமுறைகளையும் ஸ்டார்லிங்க் ஏற்க வேண்டும் என அவர் தெரிவித்தார். பார்தி குழுமத்தின் ஒன்வெப் மற்றும் ஜியோ சாட்டிலைட் கம்யூனிகேஷன்ஸின் ஜியோ-எஸ்இஎஸ் சேவைக்கு அரசு உரிமம் வழங்கியுள்ளது.