EBM News Tamil
Leading News Portal in Tamil

பிரான்ஸில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு: 6 பகுதிகளுக்கு ரெட் அலர்ட் | severe flooding hits south france following heavy rain red alert for 6 regions


பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்த நாட்டின் தெற்கு பகுதியில் மழை வெள்ள பாதிப்பு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள 6 நகரங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மூன்றாவது பெரிய நகரமான லியோன், திரைப்பட விழா நடைபெறும் கான் உள்ளிட்ட நகரங்களும் இந்தப் பட்டியலில் அடங்கும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதோடு நாட்டின் 18 பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு கருதி சாலைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், நீர் சூழ்ந்துள்ள இடங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதன் மூலம் மக்கள் தங்களை ஆபத்துக்கு ஆளாக்கி கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். வெள்ளத்தால் உயிரிழப்பு மற்றும் காயம் போன்ற அசம்பாவிதங்கள் எதுவும் பதிவாகவில்லை என தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் வெள்ள பாதிப்பு குறித்த தகவல் முறைப்படி வெளியாகவில்லை.

தெற்கு ஐரோப்பாவில் ஒரு வார காலத்துக்கு முன்பு ஏற்பட்ட கிர்க் சூறாவளி பிரான்ஸ் நாட்டில் வெள்ளம் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் சுமார் 630 மில்லிமீட்டர் மழை வெறும் 48 மணி நேரங்களில் பதிவானதாக பிரான்ஸ் நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மழை வெள்ளம் காரணமாக ஆறுகள் நிரம்பி வழிகின்றன. அர்திஷ் பகுதியில் வெள்ள பாதிப்பு அதிகம் என உள்ளூர் ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிலைமையை கையாள தீயணைப்பு படையினர், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தயாராக உள்ளன. இதோடு நாட்டின் 18 பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.