EBM News Tamil
Leading News Portal in Tamil

வங்கதேசத்தில் பூஜை மண்டபம் மீது தாக்குதல்: இந்துக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்தியா வலியுறுத்தல் | Amid reports of deities being desecrated during Durga Puja, MEA urges Bangladesh govt to ensure safety of Hindus, other minorities


புதுடெல்லி: இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று வங்கதேச அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு வங்கதேசத்தின் பல்வேறு கோயில்களிலும் இந்துக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், தலைநகர் தாக்காவில் தண்டிபஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜை மண்டபம் தாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வங்கதேச அரசை வலியுறுத்தி இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டாக்காவின் தண்டிபஜார் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பூஜை மண்டபம் தாக்கப்பட்டது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதேபோல், வங்கதேசத்தின் சக்திரா நகரில் உள்ள ஜெஷோரேஸ்வரி காளி கோயிலில் உள்ள அம்மனுக்கு வழங்கப்பட்ட கிரீடம் திருடுபோயுள்ளது.

இவை அனைத்தும் விரும்பத்தகாத சம்பவங்கள். கோயில்களையும் தெய்வங்களையும் இழிவுபடுத்துவது, சேதப்படுத்துவது என கடந்த பல நாட்களாக திட்டமிட்ட ரீதியில் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்துக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வங்கதேச அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, இந்த புனிதமான பண்டிகை நேரத்தில் இது மிகவும் முக்கியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்று வரும் துர்கா பூஜை கொண்டாட்டங்களுக்கு எதிராக 35 விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டாக்கா போலீசார் தெரிவித்துள்ளனர்.

வங்கதேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டத்தை அடுத்து, அங்குள்ள இந்துக்கள் மீதும், கோயில்கள் மீதும் முஸ்லிம்கள் தாக்குதல்களை நடத்தினர். இதனையடுத்து, இந்துக்கள் பெருமளவில் திரண்டு வீதிகளில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். அந்நாட்டின் புதிய ஆட்சியாளரான முகம்மது யூனுஸ், இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் பாதுகாப்பை அனைவரும் உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.