EBM News Tamil
Leading News Portal in Tamil

டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா ஒருமனதாக தேர்வு! | Noel Tata appointed Chairman of Tata Trusts unanimously


மும்பை: ரத்தன் டாடா மறைவைத் தொடர்ந்து டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டாடா அறக்கட்டளை தலைவராக பல ஆண்டுகாலம் ரத்தன் டாடா செயல்பட்டு வந்தார். அவருக்கு வாரிசுகள் யாரும் இல்லை என்பதாலும், தனக்குப் பிறகு யார் அறக்கட்டளை தலைவராக வரவேண்டும் என்று அவர் யாரையும் கைகாட்டவில்லை என்பதாலும், அவரது மறைவைத் தொடர்ந்து அறக்கட்டளைக்கான அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்.11) கூடியது.

இதில் ரத்தன் டாடாவின் ஒன்றுவிட்ட சகோதரர் நோயல் டாடாவை, டாடா அறக்கட்டளை தலைவராக நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்தனர். நோயல் டாடா கடந்த 40 ஆண்டுகாலமாக டாடா குழுமத்தில் முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். மேலும் டாடா அறக்கட்டளை நிர்வாகத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர்.

67 வயதான நோயல் டாடா, டோராப்ஜி டாடா அறக்கட்டளை மற்றும் ரத்தன் டாடா அறக்கட்டளை ஆகியவற்றில் அறங்காவலராக இருந்து வருகிறார். மேலும் டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். டாடா குழுமத்துடனான அவரது நீண்டகால தொடர்பு மற்றும் இந்த அறக்கட்டளை நிர்வாகங்களில் அவரது பங்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவர் புதிய நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் தொடங்கி சாமானிய மக்கள் வரை பலரும் இரங்கல் தெரிவித்தனர். அவரது உடல், மும்பை வோர்லி மயானத்தில் அரசு மரியாதையுடன் நேற்று தகனம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.