ரத்தன் டாடா – ஒரு சகாப்தம் | தலைவர்கள், தொழிலதிபர்கள் புகழஞ்சலி | Leaders, industrialists condole death of ratan tata
தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி: இந்திய தொழில் நிறுவனங்களில், மகத்தான அர்ப்பணிப்பு, தொலைநோக்கு மற்றும்நேர்மை காரணமாக நான் டாடாவை மிகவும்நேசிக்கிறேன். அந்த குழுமத்தை பல ஆண்டுகள் ரத்தன் டாடா வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். இந்திய தொழில்துறையில் அழியாத முத்திரையை அவர் பதித்துள்ளார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்: இந்திய தொழில்துறையின் தலைசிறந்த தலைவரான ரத்தன் டாடாவின் மறைவு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. மிகப்பெரிய தொழிலதிபர் என்பதை காட்டிலும் அவர்தனது வாழ்நாளில் தொடங்கி வளர்த்தபல்வேறு அறக்கட்டளை பணிகளில் அவரது தொலைநோக்கும் மனிதாபிமானமும் நிரூபணம் ஆனது. பல சந்தர்ப்பங்களில் அவருடன் மிக நெருக்கமாக பணியாற்றியதில் எனக்கு இனிமையான நினைவுகள் உள்ளன.
உள்துறை அமைச்சர் அமித்ஷா: புகழ்பெற்ற தொழிலதிபரும் உண்மையான தேசியவாதியுமான டாடாவின் மறைவால் மிகுந்த வருத்தம் அடைந்தேன். டாடா தனது வாழ்வை தேசத்தின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்தார். அவர் நம் இதயங்களில் என்றென்றும் வாழ்வார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்: ரத்தன்டாடாவின் மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவாகும். இந்திய தொழில் துறை நவீனமயமாக்கலில் அவர் முக்கியப் பங்காற்றினார். தொழில்துறை உலகமயமாக்கலில் இன்னும் அதிக பங்காற்றினார். பல சந்தர்ப்பங்களில் அவருடன் உரையாடியது எனது கிடைத்த பாக்கியம் ஆகும்.
இன்போசிஸ் நாராயணமூர்த்தி: ரத்தன் போன்ற அன்புக்குரிய நண்பரை இழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. நெறிசார்ந்த தலைமைப் பண்பில் எனக்கு அவர் முன்மாதிரியாக திகழ்ந்தார். நெறிசார்ந்த விஷயங்களில் தெளிவின்மை மற்றும் குழப்பம் ஏற்படும்போதெல்லாம் அவர் எனக்கு ஒரு தார்மீக திசைகாட்டியாக இருந்தார்.
தொழிலதிபர் முகேஷ் அம்பானி: இந்தியாவுக்கும் இந்திய தொழில் நிறுவனங்களுக்கும் இன்று மிகவும் சோகமான நாள். டாடா குழுமத்துக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியருக்கும் அவர் பிக் பாஸ். தனிப்பட்ட முறையில் ஓர் அன்பான நண்பரை நான் இழந்துள்ளதால் ரத்தன் டாடாவின் மறைவு பெரும் துயரத்தை அளிக்கிறது.
தொழிலதிபர் கவுதம் அதானி: நவீன இந்தியாவின் பாதையை மறுவரையறை செய்த ஒரு மாபெரும் தொலைநோக்கு பார்வையாளரை இந்தியா இழந்துவிட்டது. ரத்தன் டாடா ஒரு தொழில் தலைவர் மட்டுமல்ல. ஒருமைப்பாடு மற்றும் கருணையுடன் இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்தினார். பெரிய நன்மைக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். அவரைப் போன்ற ஜாம்பவான்கள் ஒருபோதும் மறைவதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, கூகுள் செயல் தலைவர் சுந்தர் பிச்சை, இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சைலேஷ் சந்திரா, ஹீரோ மோட்டோகார்ப் செயல் தலைவர் பவன் முஞ்சால் உள்ளிட்டோர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர அமைச்சரவை அஞ்சலி: ஆந்திர மாநிலம் அமராவதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ரத்தன் டாடா மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது.
இதையடுத்து ரத்தன் டாடாவின் புகைப்படத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாடு மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மதியம் மும்பை புறப்பட்டுச் சென்ற சந்திரபாபு நாயுடு, ரத்தன் டாடாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். டாட்டா போன்றவர்கள் இவ்வுலகை விட்டு பிரிவது நமக்கு பேரிழப்பு என சந்திரபாபு நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார்.