“தேசப்பற்றை அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது’’ – ஹரியானாவில் பிரதமர் மோடி பிரச்சாரம் | Congress wants to destroy patriotism from this country: Prime Minister Narendra Modi
பல்வால் (ஹரியானா): நமது நாட்டில் இருந்து தேசப்பற்றை அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது என்றும், நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வு வலுப்பெற்றால், தங்களால் வெற்றி பெற முடியாது என்று அக்கட்சி கருதுகிறது என்றும் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பல்வாலில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியது: “ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வை அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற செய்ய ஹரியானா மக்கள் மீண்டும் முடிவு செய்துள்ளனர். பரபரப்பும், உற்சாகமும் நிறைந்த இந்தக் காட்சி, தேர்தல் முடிவுகளின் உணர்வைத் தருகிறது. உங்களின் ஆசீர்வாதங்களுக்கும் ஒத்துழைப்புக்கும் நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
மத்தியில் யாருடைய ஆட்சி இருக்கிறதோ, அதே அரசாங்கம் ஹரியானாவிலும் அமைக்கப்பட்டுள்ளது என்ற சாதனையை இந்த மாநிலம் பெற்றுள்ளது. மத்தியில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியை அமைத்தீர்கள், இப்போது ஹரியானாவிலும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளீர்கள். ஹரியானா எங்களுக்கு வேலை செய்ய கற்றுக் கொடுத்துள்ளது. காங்கிரஸின் ஃபார்முலா என்னவென்றால், அது தானும் வேலை செய்யாது; மற்றவர்களையும் வேலை செய்ய விடாது. காங்கிரஸின் அரசியல் பொய்யான வாக்குறுதிகளில் மட்டுமே உள்ளது. அதேசமயம் பாஜகவின் அரசியல் கடின உழைப்பு மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டது. நாங்கள் முடிவுகளில் கவனம் செலுத்துகிறோம்.
நாட்டுக்கு முக்கியமான ஒவ்வொரு பிரச்சினையையும் சிக்கலாக்கி வைத்தது காங்கிரஸ். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. ஜம்மு காஷ்மீரில் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்த காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் நமது சகோதரிகளுக்கு இடஒதுக்கீட்டை வங்கவில்லை. நமது இஸ்லாமிய சகோதரிகளை முத்தலாக் பிரச்சனையில் சிக்க வைத்தது. நாட்டின் மற்றும் நாட்டு மக்களின் பிரச்சனைகளை காங்கிரஸ் தீர்க்கவில்லை. மாறாக, தனது சொந்த குடும்பத்தை நிலைநாட்ட தனது முழு சக்தியையும் பயன்படுத்தியது.
நமது நாட்டில் இருந்து தேசப்பற்றை அழிக்க காங்கிரஸ் விரும்புகிறது. நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வு வலுப்பெற்றால், வெற்றி பெறுவது சாத்தியமற்றது என்று காங்கிரஸ் கருதுகிறது. எனவே, தேசபக்தர்களின் ஒற்றுமையை உடைக்க காங்கிரஸ் புதிய சோதனைகளை முயற்சித்து வருகிறது.
மக்களவைத் தேர்தலின் போது காங்கிரஸ் பொய்களை பயன்படுத்தியது. ஹரியானாவிலும் காங்கிரஸ் அதையே விரிவுபடுத்துகிறது. காங்கிரஸ் தனது வாக்கு வங்கி பாதுகாப்பாக இருப்பதாக கருதுகிறது. இந்தியாவை நேசிப்பவர்கள் சண்டை போட்டு பிரிவார்கள் என்று காங்கிரஸ் நினைக்கிறது. காங்கிரஸின் இந்தச் சிந்தனையும் சதியும் வெற்றியடைய நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. எனவே, இன்று முழு ஹரியானாவும் உறுதிமொழி எடுக்க வேண்டும் – இந்தியாவை நேசிப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம், நாம் ஒன்றாக நாட்டிற்காக வாக்களிப்போம்.
தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வருவோம் என்று காங்கிரஸ் இன்று சொல்கிறது. நாட்டிலேயே மிகப் பெரிய தலித் விரோத கட்சி காங்கிரஸ். இந்தக் கட்சி, டாக்டர் அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் தோல்வியடையச் செய்தது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் அவரது புகைப்படத்தை வைக்கக்கூட அனுமதிக்கவில்லை.
இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வர காங்கிரஸ் ஒரு திட்டத்தை வகுத்துள்ளது. ஹரியானா அவர்களுக்கு அதன் சோதனை மாநிலமாக இருக்க போகிறது. ஆனால் பாஜக இருக்கும் வரை, மோடி இருக்கும் வரை அரசியலமைப்புச் சட்டம் SC, ST, OBC சமூகத்தினருக்கு வழங்கியு்ள்ள இடஒதுக்கீட்டு உரிமையை யாராலும் பறிக்க முடியாது. ஹரியானாவில், பாஜக அரசு சுமார் 1.5 லட்சம் அரசு வேலைகளை வழங்கியது. அதுவும், எவ்வித ஊழலும் இல்லாமல். ஹரியானா மக்கள் மீது மீண்டும் ஊழலை திணிக்க காங்கிரஸ் கட்சியினர் விரும்புகிறார்கள். அவர்கள் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இல்லை. காங்கிரஸின் எல்லா நரம்புகளிலும் ஊழல் ஓடுகிறது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவது (MSP) குறித்து காங்கிரஸ் பெரிதாக பேசுகிறது. ஆனால் இங்கு காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது 3-4 பயிர்களுக்கு மட்டுமே MSP வழங்கப்பட்டது. அதேசமயம் பாஜக அரசு 24 பயிர்களை MSP விலையில் கொள்முதல் செய்கிறது” என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.