இந்தியாவின் புகழை கெடுக்க ராகுல் வெளிநாடு செல்கிறார்: மத்திய அமைச்சர் விமர்சனம் | Rahul goes abroad to tarnish India s image Union minister
புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: முற்காலத்துக்கு செல்லும் தொழில்நுட்பம் ஏதேனும் இருக்குமானால் ராகுல் காந்தி தனது பாட்டியிடம் சென்று ஆர்எஸ்எஸ் பங்கு பற்றி கேட்டறிய வேண்டும்.
ஆர்எஸ்எஸ் பற்றி அறிய ராகுல் பல பிறவிகள் எடுக்க வேண்டும். ஒரு துரோகியால் ஆர்எஸ்எஸ் பற்றி அறிந்துகொள்ள முடியாது. வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை விமர்சிப்பவர்கள் ஆர்எஸ்எஸ்ஸை அறிய முடியாது. இந்தியாவின் புகழை கெடுக்கவே ராகுல் வெளிநாடு செல்வதாக தோன்றுகிறது. ஆர்எஸ்எஸ், இந்தியாவின் விழுமியங்கள் மற்றும் கலாச்சாரத்தில் இருந்து பிறந்தது.
யுவராஜ் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸை மக்கள் மூன்றாவது முறையாக நிராகரித்துள்ளனர். இந்தியாவை போற்றுவதற்கு பதிலாக இந்தி யாவை அவதூறு செய்யவும் சீனாவை புகழ்வதற்காகவும் ராகுல் வெளிநாடு செல்கிறார். அவர் சீனாவின் பணத்தில் வளர்வது போல் தெரிகிறது. இவ்வாறு கிரிராஜ் சிங் கூறினார்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நளின் கோலி கூறும்போது, “இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் ஒரு பகுதியாக இருக்கும் எதனுடனும் ராகுல் காந்தி தன்னை இணைத்துக் கொள்ள விரும்பவில்லை. அவர் பதிலளிக்க நிறைய இருக்கிறது. ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்கிரிப்டில் அது இருக்க வாய்ப்பில்லை. அவர் வெளிநாடு சென்று இந்தியாவின் நற்பெயரை கெடுக்கிறார்’’ என்றார்.