EBM News Tamil
Leading News Portal in Tamil

கன்வர் யாத்திரை விவகாரம்: இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு | Kanwar Yatra issue SC extends interim stay on directives issued on eateries


புதுடெல்லி: கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் அதன் உரிமையாளர்களின் பெயர்களை காண்பிக்கும் பெயர்ப் பலகைகளை வைக்க வேண்டும் என்ற உ.பி. அரசு உத்தரவுக்கு விதித்த இடைக்கால தடையை ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு, “நாங்கள் எங்களின் ஜூலை 22-ம் தேதி உத்தரவுக்கு விளக்கம் அளிக்கப் போவதில்லை. எங்களின் அன்றைய உத்தரவில் சொல்ல வேண்டியவைகளை நாங்கள் தெரிவித்துவிட்டோம். ஒருவரின் பெயரினை தெரிவிக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்த முடியாது.” என்று தெரிவித்தது.

மேலும் நீதிபதிகள் அமர்வு, மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் அரசுகள் அவைகளின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிப்பதற்கு கூடுதல் அவகாசம் அளித்தது. அதேபோல், மாநில அரசுகளின் பதில்களுக்கு மனுதாரர்கள் பதில் அளிக்க அவகாசம் அளித்து, வழக்கினை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே உத்தரப் பிரதேச அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பதிலில், கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் பெயர்ப் பலகைகளில் அதன் உரிமையாளர்கள், ஊழியர்களின் பெயர்கள் இடம்பெற வேண்டும் என்ற தனது உத்தரவினை நியாயப்படுத்தியிருந்தது. அந்த யோசனை வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வரும், தேவையில்லாத குழப்பத்தினை தவிர்க்கும், யாத்திரையில் அமைதியை உறுதி செய்யும் என்று தெரிவித்திருந்தது.

முன்னதாக, கன்வர் யாத்திரை வழித்தடத்தில் உள்ள உணவகங்கள் தங்களின் பெயர்ப் பலகையில் அதன் உரிமையாளர்களின் பெயர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற பாஜக ஆளும் மாநில உத்தரப் பிரதேச, உத்தராகண்ட் மற்றும் மத்தியப் பிரதேச மாநில அரசுகளின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் ஜூலை 22-ம் தேதி இடைக்காலத் தடைவிதித்திருந்தது.

அப்போது நீதிபதிகள், “பக்தர்களுக்கு அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சைவ உணவு கிடைப்பதையும் அவற்றின் தரத்தையும் அதிகாரிகள் உறுதி செய்யலாம். ஆனால் அந்த நோக்கத்தை இந்த உத்தரவு மூலம் அடைய முடியாது. இந்த உத்தரவை அனுமதித்தால் அது இந்திய குடியரசின் மதச்சார்பின்மையை பாதிக்கும். இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம். அதுவரை உ.பி. உத்தரவை நிறுத்தி வைக்கிறோம். உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பெயரை எழுதி வைக்கும்படி யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது” என்று தெரிவித்தனர்.