சென்னை தாழம்பூரில் இருக்கும் என்னுடைய சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து காலை ஆறு மணிக்கு சைக்கிளில் புறப்பட்டு, நாவலூர் சந்திப்பில் நடைபாதை ஓரத்தில் சைக்கிளைப் போட்டு விட்டு, மூன்று பேருந்துகளில் பயணித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் இருக்கும் நான் பணிபுரியும் காந்தி அமைதி நிறுவன அலுவலகத்துக்குத் தினமும் செல்கிறேன். சுமார் இரண்டு மணி நேரப் பயணம். பயண நெரிசல் இருந்தால் இரண்டரை மணி நேரம்.
மீண்டும் மாலை நான்கு மணிக்குக் கிளம்பி வீட்டுக்கு ஆறு அல்லது ஆறரை மணிக்கு நாவலூரில் வந்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு வந்து சேருகிறேன். இந்த போக வர நான்கு அல்லது ஐந்து மணி நேரப் பயணமும் பேருந்துகளில் நின்று கொண்டே தான். சைக்கிளில் மட்டும்தான் உட்கார்ந்து செல்வேன். அதிர்ஷ்டம் இருந்தாலோ அல்லது பேருந்துகளில் இடம் பிடித்து காது கருவிகளுடன் தங்கள் செல்போன்களுக்குள் ஐக்கியமாகி விடுகிற இளைஞர்கள் கருணை கொண்டாலோ மட்டும்தான் என்னைப் போன்ற 72 வயதானவர்களுக்கு சீட்டு கிடைக்கும். இல்லையெனில் நின்று கொண்டேதான் பயணம். அதிர்ஷ்டமாவது அடிக்கலாம், ஆனால் இரண்டாவது சொல்லப்பட்டது என் வாழ்வில் நடந்ததே இல்லை. நம் இளைய தலைமுறைகளை அப்படி ஒரு தன்-மைய தியானத்தில் பழக்கியிருக்கிறோம்.
தினமும் ஐந்து மணி நேரம் கிடைக்கிறதே அதில் தியானம் செய்தால் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக அமையும் என்று யாராவது நீங்கள் என்னிடம் சொல்லத் துணிவீர்களா என்ன? அதற்குரிய தியான முறைதான் உங்கள் யாருக்காவது தெரியுமா? அறைக்குள் சென்று, தானே தனக்குள் புலம்புவதை நாம் நிறைய பேர் தியானம் என்கிறோம். ஒன்றை அடைவதற்கு வெறியும் ஆங்காரமும் மனசுக்குள் பொங்கி எரிமலை போன்று வெடிக்கும் பொழுது அறைக்குள் அமர்ந்து மூச்சைத் தம் கட்டினால் அது தியானம் ஆகிவிடுமா?
இந்த ஐந்து மணி நேரத்தில் என் உடல் படும் வேதனைக்கு என்ன மாற்று தருவீர்கள்? ஏசி கார் அல்லது ஆட்டோவில் செல்லலாமே என்பீர்கள். போகவர பேருந்துக் கட்டணம் நூறு ரூபாய்தான். ஆனால் போக அறுநூறு வர அறுநூறு ஆக ஆயிரத்து இருநூறு காருக்குக் கொடுப்பது எப்படி? உடல் துயரம் தீர்க்க மனத்தினால் முடியும். அது தியானத்தினால் தான் முடியும். ஆனால், உடலில் வலியுடன் தியானம் செய்ய முடிவதில்லை. ஒரே ஒரு வழி தான் அதற்கு இருக்கிறது. என்னை விட அதிக உடல் வலியில் அன்றாடம் அவதிப்பட்டாலும் ஆனந்தமாக அதை ஏற்று வாழ்பவர்களைக் கவனிப்பது. தியானம் என்பதே நம்மைச் சுற்றி நடக்கும் அத்தனையையும் கவனித்து தனக்கும் அவைகளுக்கும் இருக்கும் தொடர்பை ஒவ்வொரு கணமும் உணர்ந்து வாழ்வது தானே?
இப்படியாகப் புலம்பிக்கொண்டே மாலை வீடு திரும்பும் போது நாவலூரில் வந்து இறங்கினேன். சாலை ஓரத்தில் ஒரு படுதாவை விரித்து கத்தரிப்பிஞ்சுகள், வெண்டைபிஞ்சுகள், கீரைக் கட்டுகள் என்ற மூன்று பொருள்களை மட்டும் கூறுகட்டி வைத்துக்கொண்டு ஒரு முதியவர் கோடை வெயிலில் அமர்ந்திருந்தார். தள்ளாத அந்த வயதில் கள்ளம் கபடு இல்லாத புன்சிரிப்பு மாறாத முகம். ஒரு கூறில் இருக்கும் காய் இருபது ரூபாய். ஆனால் அதுவே சூப்பர் மார்க்கெட்டில் முப்பது ரூபாய் இருக்கும். பச்சைப் பசேல் என்று செழுமை கொஞ்சியது காய்கறிகளில். கத்தரி, வெண்டை, கீரை மூன்றையும் வாங்கிக்கொண்டு ரூபாய் அறுபது கொடுத்தேன். பத்து ரூபாயைத் திருப்பித் தந்தார் அவர். கீரை பத்து ரூபாய்தானாம்.
அவர் அருகில் உட்கார்ந்து அவரைப் பற்றி விசாரித்தேன். முக்கால் மணி நேரம் பயணித்து திருப்போரூர் தாண்டி இருக்கும் ஊரில் தன் வீட்டு சிறிய தோட்டத்தில் பயிர் செய்கிறாராம். தினமும் மாலை நான்கு மணிக்கு வந்து விற்றுவிட்டு ஏழு மணிக்கு திரும்பிச் சென்று விடுவாராம். ஏழு மணிக்கு அவரிடம் வாங்க வருகிறவருக்கு ஏதோ ஒரு விலையில் எல்லாவற்றையும் கொடுத்து விடுவாராம். அதனால் நஷ்டமாகாதா? என்று கேட்டேன். அவர் அப்பாவித்தனமாக சிரித்துக் கொண்டார். லாப நஷ்டம் என்பதெல்லாம் கணக்குப் பார்க்கும் மூளை உள்ளவர்களுக்குதான் என்று அவர் சொல்வது போல் எனக்குத் தோன்றியது. அவருடைய இந்த குழந்தைத் தன்மைதானே தியானம்? மூளையில் கணக்குப் போடுகிற பகுதி சுத்தமாக அவருக்கு வேலை செய்யவில்லை. எனவே இயல்பாகவே தியானம் சித்திக்கிறது அவருக்கு. நமக்கு அந்தப் பகுதி மட்டுமே வேலை செய்கிறது!
சாலை ஓரத்தில் என்ன ஒரு அட்டகாசமாக, சுதந்திரமாக, சுய உழைப்பில், தன்னால் உற்பத்தி செய்யப்பட்ட அழகான காய்கறிகளுடன் ஒய்யாரமாக அமர்ந்திருக்கிறார்! ‘வித்தா சரி விக்காட்டி அதைவிட சரி’ என்ற அவருடைய அணுகுமுறை பன்னாட்டு நிறுவன விற்பனை வல்லுனர்களுக்கு ஒரு பெரிய சவால்தான்!
அந்த வயதான உடம்பில் வலி இல்லாமலா இருக்கிறது? அது அவருடைய வாழ்வின் ஒரு அங்கம். அந்த வலியும் அவரும் ஒன்றாகிவிட்டார்கள். வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது அவர் அளவில் ஒரு தத்துவம். புரியாத புதிர். இயல்பு நிலையே தியானம். தப்பித்து ஓட எத்தனிப்பது தியானமாகாது. இயல்பான இயற்கைப் பரிணமிப்பிற்குத் தன்னைக் கையளித்து சரணாகதி ஆகும் நிலைதானே தியானம்? சரணாகதி என்று வார்த்தையில் வடிக்கக்கூட அறியாத வெகுளித்தன்மை என்னும் தியானத்தை அவர் இயல்பில் கைவரப் பெற்றிருந்தார்.
பேருந்தில் நின்று வந்த களைப்பு அவரைப் பார்த்த நொடியில் கரைந்து ஓடி மகிழ்ச்சி பொங்கியது. அவர் பெயரைக் கேட்டேன். இன்னும் என்னுள் மகிழ்ச்சி பொங்கியது. ஏனெனில் அவர் பெயரோ கோவிந்தசாமி, என் பெயரோ குழந்தைசாமி. அவருடன் அமர்ந்திருந்த அந்த ஐந்து நிமிடங்கள் என்னை எனக்கு உணர்த்திய தியான நேரம். அது சரி, உங்களுக்கும் தியானம் சித்திக்க வேண்டாமா? ஒன்று செய்யலாம் வாருங்கள். தினமும் இல்லாவிட்டாலும் வாரம் ஒரு முறையாவது அவரைச் சந்தித்து உரையாடி இன்புற்று இரண்டு கூறு காய்கறி கீரை வாங்கிச் செல்லலாம். தயவுசெய்து அவருக்கு உதவி செய்கிறேன் என்று ஒரு ரூபாய் கூட அதிகமாக இலவசமாய்க் கொடுத்து கேவலப்படுத்தாதீர்கள். அவர் சொல்லும் விலையை மட்டும் கொடுங்கள் போதும். கோவிந்தசாமியை விட நரக வேதனை அனுபவிப்பவர்கள் உலகில் பல மூளை முடுக்குகளில் வாழ்கிறார்கள்.
தங்கள் உடல் உழைப்பால் சுயசார்புடன் வாழ முயல்வோர்களை மட்டும் இனம் கண்டு, முடியுமானால் அவர்களுடைய உடல் உழைப்பில் பங்கு போடுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நல்லது, அதுவே உண்மையான தியானமும் ஆகும். பாவப்பட்டவர்கள் நலிந்தவர்கள் எங்கெல்லாம் உங்கள் கண்களுக்குத் தெரிகிறார்களோ, அவர்களை கடவுளாக வழிபடுங்கள். அவர்களுடைய சுய முன்னேற்றத்திற்கு உதவுமாறு உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ள முன் வாருங்கள். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஆடம்பரமான உடைகளை அணிபவரானால், செலவுகளைக் குறைத்து எளிய உடைகளை அணிய முன் வாருங்கள். மாறாக உங்களைப் போலவே அந்த நலிந்தவர்களுக்கும் ஆடம்பர உடைகளை வாங்கி இலவசமாகத் தருவதைத் தவிருங்கள்.
ஆடம்பரமாக உடை அணிபவர்களே தலைவர்களாக முடியும் என்ற மாயக்கருத்தை உடைத்து எறியுங்கள். நான் – நீ என்ற பிரிவினை எண்ணம் எவருடைய மனத்தில் ஆழமாய் வேரூன்றி இருக்கிறதோ, அதில் தியானம் சித்திக்காது. எனவே எல்லோரையும் ஓருயிர் எனக் கருதி அனைவரையும் அரவணைத்து தியானத்திற்கு உரமேற்றுங்கள். இந்த இரண்டற்ற நிலைதான் கடவுள் சக்தி. இதற்கு முரணாக மனிதனால் அவனுடைய சிற்றறிவுடன் படைக்கப்பட்ட கடவுளர்களும் மதங்களும் மனிதனைப் பிரிக்கும் நிலை வருமாயின் அது இந்தத் தியானத்தைக் குலைக்கும் வல்லமை பெற்றுவிடும் என்பதை உணர்வில் நிறுத்துக.
எனவே, நம் ஐம்புலன்களையும் திறந்து வாழ்வை முழுமையாகக் கவனிப்போம். அதற்கு உதவியாக உடலைக் கட்டுப்படுத்துவோம். ஆசைப்பட்டதை அடைந்தே தீரும் வெறியை அடக்கி, கிடைப்பதை மகிழ்வுடன் ஏற்போம். புறத்தேடுதலையும் புறவழிபாடுகளையும் விட, அக வழிபாட்டின் மூலம் அகச் சக்திகளைப் பெருக்குவோம். உழைப்போம், உடலால் உழைப்போம், உன்னதமாய் உண்போம். உணவுக்கு உழைக்காது அதிகாரத்தை பிடிக்கப் பேயாய் அலையும் வர்க்கத்தினரை மன்னித்து ஏற்றுக் கொள்வோம். பலன் கருதாப் பணியே தவம் என உணர்வோம். ஒவ்வொரு விநாடியும் பரிணமித்து, மாறா குழந்தைத்தன்மையுடன் ஒற்றுமையுடன் வாழ்வோம்.
– சூ.குழந்தைசாமி, செயலர், காந்தி அமைதி நிறுவனம்