“ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை” – மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி விளக்கம் | Central Minister explain not signed any documents declaring Hamas as a terrorist organization
புதுடெல்லி: காசா பகுதியில் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கும் எந்த ஆவணத்திலும் தான் கையெழுத்திடவில்லை என்று வெளியுறவுத்துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி விளக்கமளித்துள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கும் ஆவணமொன்றில் அமைச்சர் மீனாட்சி லேகியை இணைத்து வெளியான கேள்வி ஒன்றின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரவியது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் லேகி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி தொடர்புடைய எந்த ஆவணத்திலும் நான் கையெழுத்திடவில்லை. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் பதில் அளிப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு எக்ஸ் பதிவில் “குற்றவாளிகள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
வெளியுறவுத்துறை இணையத்தில் இது தொடர்பாக காணக்கிடைக்கும் ஆவணத்தில் மக்களவை உறுப்பினர் கே.சுதாகரன் கேட்டுள்ள கேள்விக்கு இணையமைச்சர் மீனாட்சி பதில் அளித்துள்ளார். அந்தப் பதிலும் நேரடியாக இல்லாமல், குறிப்பிடப்பட்டுள்ள அமைப்பு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம், 1967 அல்லது உபா சட்டம் (Unlawful Activities (Prevention) Act (UAPA), கீழ் தீவிரவாத அமைப்பாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் சம்மந்தப்பட்ட அமைச்சகங்களிடம் கேள்விகள் கேட்டால், அவர்களுக்கு அந்த அமைச்சகங்கள் மூலம் பதில் அனுப்பப்படும். இந்தக் கேள்வி, பதில்கள் அந்தந்த அமைச்சகங்கள் மற்றும் மக்களவை இணையதளங்களில் பதிவேற்றப்படும். இதில் நட்சத்திர கேள்விகள் என அறிப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகள் மக்களவையின் கேள்வி நேரத்தின் போது அவையில் வைக்கப்படும். அந்த நேரத்தி்ல் சபாநாயகர் உறுப்பினர்களை அனுமதித்தால் கூடுதல் கேள்விகள் கேட்கலாம். இந்த கையெழுத்து விவகாரத்தில் அந்தக் கேள்வி நட்சத்திரமிடப்படாத கேள்வி என்பது குறிப்பிடத்தக்கது.