EBM News Tamil
Leading News Portal in Tamil

மக்களவையில் கேள்வி எழுப்ப லஞ்சம்: திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் | Bribe to raise question in Lok Sabha Trinamool MP Mahua Moitra sacked


புதுடெல்லி: மக்களவையில் கேள்விகளை எழுப்ப லஞ்சம் பெற்ற விவகாரத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மேற்குவங்கத்தின் கிருஷ்ணாநகர் தொகுதியில் இருந்து திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் மக்களவையில் இதுவரை 61 கேள்விகளை எழுப்பியுள்ளார். இதில் 50 கேள்விகள் அதானி குழுமம் தொடர்பானவை.

பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் அதானிக்கு எதிராகமொய்த்ரா கேள்விகளை எழுப்பினார். இருவர் குறித்தும் மக்களவையில் அவதூறு குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்தகேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் இருந்து மொய்த்ரா பல கோடி ரூபாயை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும்மொய்த்ராவின் நாடாளுமன்ற இணைய கணக்கை துபாயில் வசிக்கும் ஹிராநந்தானி பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மொய்த்ராவின் முன்னாள் காதலர் ஜெய் ஆனந்த் தேஹத்ராய்இந்த ரகசியத்தை அம்பலப்படுத்தினார். இதை ஆதாரமாக வைத்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக பாஜக எம்பி வினோத்குமார் சோன்கர் தலைமையிலான நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. கடந்த நவம்பர் 9-ம் தேதி நெறிமுறைகள் குழு தனது அறிக்கையை வெளியிட்டது. அதில் மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த சூழலில் நாடாளுமன்ற நெறிமுறைகள் குழுவின் தலைவர் விஜய் சோன்கர் நேற்று காலை500 பக்க அறிக்கையை மக்களவையில் தாக்கல் செய்தார். இதை எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆட்சேபித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில் அவை கூடியபோது மஹுவா மொய்த்ரா விவகாரம் தொடர்பாக 30 நிமிடங்கள் விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. திரிணமூல் எம்பிக்கள் பேசும்போது, “500 பக்க அறிக்கையை சில மணி நேரங்களில் படிக்க முடியாது. 3 நாட்கள் அவகாசம் வேண்டும்” என்று கோரினர். இதை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்கவில்லை.

விவாதத்தின்போது மஹுவா மொய்த்ரா தனது கருத்தை எடுத்துரைக்க அனுமதி கோரினார். இதற்கு அவைத் தலைவர் பதிலளித்தபோது, “நெறிமுறைகள் குழுவின் விசாரணையின்போது மொய்த்ரா தனது கருத்தை பதிவுசெய்ய போதிய அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் நெறிமுறைகள் குழுவின் பரிந்துரை குறித்து மக்களவையில் கருத்துகளை எடுத்துரைக்க முடியாது. இதற்கு நாடாளுமன்ற விதிகளில் இடமில்லை” என்று தெரிவித்தார்.

சுமார் 30 நிமிட விவாதத்துக்குப் பிறகு மொய்த்ராவின் எம்பி பதவியை பறிப்பது தொடர்பான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதை புறக்கணித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். பெரும்பான்மை எம்பிக்களின்ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் மஹுவா மொய்த்ராவின் எம்பி பதவி அதிகாரபூர்வமாக பறிக்கப்பட்டது.

இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மொய்த்ரா நிருபர்களிடம் கூறும்போது, “என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது. நெறிமுறைகள் குழு முழுமையாக விசாரிக்காமல் ஒருதலைப்பட்சமாக அறிக்கை அளித்துள்ளது” என்றார்.

மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியதாவது:

மக்களவையில் மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. 500 பக்க அறிக்கையை உடனடியாக எப்படி படிக்க முடியும்? அறிக்கையை படிக்க போதிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. அவையில் 30 நிமிடங்கள் மட்டுமே விவாதம் நடைபெற்றுள்ளது. பாஜகவின்பழிவாங்கும் அரசியல் மீண்டும் அரங்கேறி உள்ளது. திரிணமூல் கட்சி மொய்த்ராவுக்கு ஆதரவாக நிற்கும். இவ்வாறு மம்தா தெரிவித்தார்.