புதுடெல்லி: உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர போட்டியாளர் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 23 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர போட்டியாளர் தொடரின் முதல் சீசன் கடந்த மார்ச் மாதம் கோவாவில் நடைபெற்றது. இந்த தொடரானது உலக டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வருடத்தில் நடத்தும் 6 தொடர்களில் ஒன்றாகும். உலகத் தரவரிசை யில் முன்னணியில் இருக்கும் 30 பேர் இந்தத்தொடரில் கலந்து கொள்வார்கள். இதில் 6 பேர் முதல் 20 இடங்களுக்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
இதனால் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும் இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் உலக டேபிள் டென்னிஸ் நட்சத்திர போட்டியாளர் தொடரின் 2-வது சீசன் அடுத்த ஆண்டு ஜனவரி 23 முதல் 28 வரை கோவாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2,50,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை கொண்ட இந்த தொடரில் தரவரிசைப் புள்ளிகளும் வழங்கப்படும்.