தேசிய ரோலர் ஸ்கேட்டிங் போட்டி: தங்கப் பதக்கம் வென்று சேலம் மாணவி சாதனை | National Roller Skating Competition: Salem Student Wons Gold Medal
சேலம்: தேசிய அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே நடந்த ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சேலம் பள்ளி மாணவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சேலம் கிச்சிப் பாளையத்தைச் சேர்ந்த சக்திவேல் – கோமதி தம்பதியின் மகள் மஹிதா (16). இவர் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பிளஸ் 1 பயின்று வருகிறார். கடந்த 11 ஆண்டாக ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் மாணவி மஹிதா, கடந்த மாதம் சென்னையில் தென்மாநில அளவில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் அவர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, கடந்த நவம்பர் 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை ஹரியானா மாநிலம் குர்கானில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றார். டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 16 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆயிரம் மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் சேலம் மாணவி மஹிதா முதலிடம் வென்று தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.
இப்போட்டியில் மத்தியப் பிரதேசம், டெல்லி மாணவிகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர். தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்று நேற்று முன்தினம் சேலம் திரும்பிய மாணவியை பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வரவேற்றனர்.