EBM News Tamil
Leading News Portal in Tamil

“குஜராத் அணிக்கு வில்லியம்சனை கேப்டனாக நியமித்து இருக்கலாம்” – டிவில்லியர்ஸ் கருத்து | Williamson may be appointed captain of Gujarat team De Villiers opined


புதுடெல்லி: குஜராத் டைட்டன்ஸ் ஐபிஎல் அணிக்கு நியூஸிலாந்தின் மூத்த வீரர் கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்திருக்கலாம் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். 17-வது ஐபிஎல் சீசன் வரும் 2024-ம் ஆண்டில் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்களைத் தேர்வு செய்வதற்கான மினி ஏலம் துபாயில் வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தங்களது அணியில் தக்க வைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டிருந்தன. அதில் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த கேப்டன் ஹார்திக் பாண்டியா மும்பை அணிக்காக டிரேடிங் முறையில் மாற்றப்பட்டுள்ளார். இதன் காரணமாக இளம் வீரர் ஷுப்மன் கில்லை குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

இதுகுறித்து தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஏ பி டி வில்லியர்ஸ் கூறியதாவது:

குஜராத் டைட்டன்ஸ் அணியின் பட்டியலில் கேன் வில்லியம்சனின் பெயரை பார்த்ததும் அவரைத்தான் கேப்டனாக நியமிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் ஷுப்மன் கில்லை கேப்டனாக நியமித்து உள்ளனர்.

குஜராத் அணியில் அனுபவம் வாய்ந்த சீனியர் வீரரான கேன் வில்லியம்சனுக்கு கேப்டன் வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஷுப்மன் கில் இன்னும் சிறிது அனுபவத்தைப் பெற்றுக் கொண்டு 2025-ல் கேப்டனாக வரலாம் என்பதுதான் என்னுடைய விருப்பம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.