சுரங்கத்திலிருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் வீடு திரும்ப எய்ம்ஸ் மருத்துவர்கள் பரிந்துரை | AIIMS doctors recommend workers rescued from mines to return home
ரிஷிகேஷ்: உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா சுரங்கப் பாதையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டதால் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு கடந்த 28-ம் தேதி அனைத்து தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் ராணுவத்துக்குச் சொந்தமான சினூக் ரக ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனைத்து தொழிலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இதுகுறித்து மருத்துவர் ரவிகாந்த் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அனைத்து தொழிலாளர்களுக்கும் ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, இசிஜி உள்ளிட்ட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அனைவரும் வீடு திரும்பலாம் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.
தொழிலாளர்கள் 17 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்ததால், அவர்கள் இந்த புதிய சூழலுக்கு பழக வேண்டும். எனவே, 2 வாரங்களுக்குப் பிறகு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.