EBM News Tamil
Leading News Portal in Tamil

‘கொலைச் சதி’ – இந்திய அதிகாரி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்கு இந்தியா கவலை | Matter of concern India on US indictment of Indian official in assassination plot


புதுடெல்லி: “காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொல்ல நடந்த சதியில் இந்திய அதிகாரி ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா கூறியிருக்கும் குற்றச்சாட்டு மிகவும் கவலைக்குரிய விஷயம், அது அரசின் கொள்கைகளுக்கு முரணானது” என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்ஸி பதில் அளித்து பேசுகையில், “முன்பே கூறியது போல இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் நடந்த கலந்துரையாடலின்போது அவர்கள் சர்வதேச அளவிலான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம், கடத்தல், துப்பாக்கிச்சூடு, தீவிரவாதம் குறித்து சில தகவல்களைப் பரிமாறிக்கொண்டனர். அவை மிகவும் தீவிரமான விஷயம். அதன் காரணமாக ஓர் உயர்மட்ட விசாரணை குழு உருவாக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற பாதுகாப்பு அம்சங்கள் குறித்து வேறு எதுவும் கூற முடியாது” என்று தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க நீதித் துறை, காலிஸ்தான் பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய நடந்த சதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிகிஸ் குப்தா என்பவருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்திருந்தது. அமெரிக்க மண்ணில், பன்னுனைக் கொலை செய்ய நடந்த சதியினை அமெரிக்கா முறியடித்ததாக பைனான்சியல் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்த சில வாரங்களுக்கு பின்னர் இந்தக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ள குர்பத்வந்த் பன்னுன், நீதிக்கான சீக்கியர்கள் (எஸ்எஃப்ஜெ) அமைப்பின் தலைவராவர். இந்தியாவில் காலிஸ்தான் தனி நாடு கோரும் அனைத்து அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் தான் குர்பத்வந்தின் எஸ்எஃப்ஜெ அமைப்பும் தடை செய்யப்பட்டுள்ளது. பன்னுன் அமெரிக்கா மற்றும் கனடா என இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கிறார்.

இந்திய அதிகாரி மீதான குற்றச்சாட்டு: நீதித்துறை ஆவணங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க நீதித்துறை புதன்கிழமை வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில், “இந்தியா மற்றும் பிற பகுதிகளில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றும் இந்திய அதிகாரி ஒருவர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடியுரிமை பெற்ற வழக்கறிஞர் மற்றும் அரசியல் ஆர்வலரை அமெரிக்க மண்ணில் கொலை செய்ய சதி செய்தார். மேலும் அந்த இந்திய அதிகாரி தான் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் உளவுத்துறையில் பணியாற்றும் மூத்த பீல்ட் ஆபிஸர் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க மண்ணில் அமெரிக்க குடிமகனைக் கொலை செய்யும் முயற்சிகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. அமெரிக்காவிலும் அதற்கு வெளியேயும் அமெரிக்கர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அவர்களை கொலை செய்ய முயற்சிக்கும் யாரையும் விசாரிக்கவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் தயாராக இருக்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.