“தோல்வி விளையாட்டின் ஒரு பகுதிதான்; இந்திய அணி தனது முழு திறனையும் வெளிப்படுத்தியது” – சச்சின் ட்வீட் | Sachin Tendulkar Shares Heartfelt Message For Indian Team
புதுடெல்லி: நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்த சூழலில் 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 13-வது பதிப்பின் இறுதி ஆட்டம் 1.30 லட்சம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை, 2 முறை சாம்பியனான இந்தியா எதிர்கொண்டது. இதில், ஆஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது . இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஆறாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றுள்ளது .
நடப்பு கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி உள்ளது. இந்தச் சூழலில் சச்சின் டெண்டுல்கர் இது குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், “ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். கிரிக்கெட்டின் மிக முக்கியமான உலக கோப்பை இறுதிப் போட்டியில் அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.
திறமையான ஆட்டத்தை தொடர் முழுவதும் வெளிப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய இந்திய அணிக்கு, ஒரு மோசமான நாள் பலரின் இதயங்களை நொறுக்கி விட்டது. இந்திய வீரர்கள், ரசிகர்கள் எவ்வளவு வேதனையையும், கஷ்டத்தையையும் அனுபவிக்கிறார்கள் என்பதை என்னால் உணரமுடிகிறது. தோல்விகள் விளையாட்டின் ஒரு பகுதிதான். அதேநேரத்தில் கோப்பையை கைப்பற்றுவதற்காக ஒட்டுமொத்த இந்திய அணியும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தி, இந்தத் தொடர் முழுமைக்கும் சிறப்பாக செயல்பட்டதை நினைவு கூர்வோம்” என்று தெரிவித்துள்ளார்.