EBM News Tamil
Leading News Portal in Tamil

ரயில்வே துறையில் வேலை வழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் | Delhi High Court grants bail to Lalu Prasad Yadav s family bribe for jobs


புதுடெல்லி: ரயில்வே துறையில் வேலை வழங்குவதற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கும் அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் அவர்களது மகனும் பிஹாரின் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவுக்கும் டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியுள்ளது.

பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், 2004முதல் 2009 வரையில் காங்கிரஸ்தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது மத்திய ரயில்வே அமைச்சராக பொறுப்பு வகித்தார். அப்போது, ரயில்வேயில் வேலை வழங்க, லாலுவும் அவரது குடும்பத்தினரும் வேலைக்கு விண்ணப்பித்தவர்களிடமிருந்து நிலங்களை மிக குறைந்த விலையில் லஞ்சமாக பெற்றதாக குற்றம்ச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.இவ்வழக்குத் தொடர்பாக சிபிஐ கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. மத்திய ரயில்வே மண்டலத்தில் வேலை வழங்குவதற்கு லாலு குடும்பத்தினர் லஞ்சம் பெற்றது தொடர்பான விவரங்களை சிபிஐ அந்த குற்றப்பத்திரிகையில் முன்வைத்தது.

இந்நிலையில் தென்மேற்கு மண்டலத்தில் வேலை வழங்க லஞ்சம் பெற்றது தொடர்பாக புதிய குற்றப்பத்திரிகையை கடந்த ஜூலை மாதம் சிபிஐ தாக்கல் செய்தது. அதை விசாரித்த டெல்லிஉயர் நீதிமன்றம், லாலு பிரசாத், அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் அவர்களது மகனும் தேஜஸ்வி யாதவ் உட்பட இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை நேரில் ஆஜராக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், நேற்று இவ்வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி கீதாஞ்சலி கோயல், லாலு பிரசாத் குடும்பத்தினருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.