ODI WC 2023 | சென்னை வந்துள்ள இந்திய அணி: வீட்டுக்கு வந்ததாக ஸ்டோரி பதிவிட்ட ஜடேஜா! | team india arrived Chennai Jadeja posted story mentions home
சென்னை: உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் விளையாடும் வகையில் சென்னை வந்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி. இந்த சூழலில் ‘வீடு’ என குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் ரவீந்திர ஜடேஜா.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் நாளை (வியாழக்கிழமை) முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரும் 8-ம் தேதி விளையாடுகிறது. இந்தப் போட்டி சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியில் பங்கேற்கும் விதமாக இந்திய வீரர்கள் சென்னை வந்துள்ளனர். சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் ‘வீடு’ என குறிப்பிட்டு தான் தங்கியுள்ள விடுதி அறையின் ஜென்னலுக்கு வெளியிலான காட்சியை ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார் ஜடேஜா. அதன் பின்னணியில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன் பட பாடலின் பிஜிஎம் ஒலிக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணி வீரர்களும் சென்னை வந்துள்ளனர்.