EBM News Tamil
Leading News Portal in Tamil

எல்இடி-க்களுக்குப் பின்னால்… – 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு! | 2023 Nobel Prize in Chemistry: Three share prize for discovery of quantum dots, now used in LEDs


புதுடெல்லி: வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மவுங்கி பவெண்டி உள்பட மூவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்வீடனைச் சேர்ந்த ஆய்வாளர் ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஆல்பிரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி இந்த பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் குறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று முன்தினம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது. மூன்றாம் நாளான இன்று வேதியியலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது .

பிரான்சின் பாரிஸ் நகரில் பிறந்து அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் மவுங்கி பவெண்டி, அமெரிக்காவின் கிளவ்லேண்டு நகரில் பிறந்து நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் லூயிஸ் புரூஸ், ரஷ்யாவில் பிறந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நானோகிரிஸ்டல்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய அலெக்சி எகிமோவ் ஆகியோர் வேதியியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

குவாண்டம் புள்ளிகளை கண்டறிந்து தொகுத்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது கண்டுபிடிப்புதான் எல்இடி-க்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவர்களுக்கு நோபல் பரிசுடன் ரூ. 8 கோடிக்கான ரொக்கம் பகிர்ந்தளிக்கப்படும்.