EBM News Tamil
Leading News Portal in Tamil

எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல் பரிசு அறிவிப்பு | Nobel Prize 2023 in Physics awarded to Pierre Agostini, Ferenc Krausz, Anne L’Huillier


ஸ்டாக்ஹோம் (ஸ்வீடன்): 2023-ம் ஆண்டு இயற்பியலுகான நோபல் பரிசுக்கு விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, ஃபெரெங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளில் எலக்ட்ரான் இயக்கவியல் ஆய்வுக்காக ஒளியில் அட்டோசெகன்ட் அதிர்வுகளை உருவாக்கும் சோதனை முறைக்காக இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக ‘தி ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்ஸ்’ இன்று (அக்.3) தெரிவித்தது.

இயற்பியலுக்காக நோபல் பரிசு பெறும் அமெரிக்காவைச் சேர்ந்த பியரி அகோஸ்தினி, ஜெர்மனியைச் சேர்ந்த ஃபெரெங்க் க்ரவுஸ், ஸ்வீடனைச் சேர்ந்த அன்னி எல் ஹூலியர் ஆகிய மூன்று பேரும் அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளின் உலகிற்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆய்வு செய்வதற்கான கருவியை மனிதகுலத்துக்கு வழங்கிய பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். பியரி அகோஸ்தினி, ஃபெர்ங்க் க்ரவுஸ் மற்றும் அன்னி எல் ஹூலியர் ஒளியில் மிகக் குறுகிய துடிப்புகளை உருவாக்கும் வழிமுறைகளை நிரூபித்துள்ளனர். இது எலக்ட்ரான்கள் நகரும் அல்லது விரைவாக ஆற்றலை மாற்றும் விரைவான செயல்முறைகளை அளவிடப் பயன்படுவதாக நோபல் பரிசு குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, 2023-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசு திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்தப் பரிசு எம்ஆர்என்ஏ (messenger RNA) கோவிட் 19 தடுப்பூசி உருவாக்கத்திற்கான அடிப்படையாகக் கருதப்படும் நியூக்லியோசைடின் மாற்றம் குறித்த கண்டுபிடிப்புக்காக கடாலின் கரிகோ மற்றும் ட்ரூவ் வைஸ்மேன் இருவருக்கும் கூட்டாக வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இரண்டாவது பரிசாக இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வேதியியலுக்கான நோபல் பரிசு அக்.4-ம் தேதியும், இலக்கியத்துக்கான நோபல் பரிசு அக்.5-ம் தேதியும் அறிவிக்கப்பட இருக்கிறது. அமைதிக்கான நோபல் பரிசு வெள்ளிக்கிழமையும், பொருளாதாரத்துக்கான பரிசு அக்.9-ம் தேதியும் அறிவிக்கப்படும்.

இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பை வழங்கியவர்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கும் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசை நார்வே வழங்குகிறது. பிற பரிசுகளை ஸ்வீடன் வழங்குகிறது.

கடந்த 1896-ஆம் ஆண்டு மறைந்த ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபலின் உயிலின் படி பெறப்பட்ட 11 மில்லியன் ஸ்வீடிஸ் குரோனார் (1 மில்லியன் டாலர்) பரிசுத் தொகையைக் கொண்டது. இந்தாண்டு ஸ்வீடிஸ் குரோனார்களின் மதிப்பு வீழ்ச்சியடைந்தைத் தொடர்ந்து பரிசுத்தொகை 1 மில்லியன் குரோனார்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

ஆல்பரட் நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நடைபெறும் விழாவில் தேர்வு பெற்றவர்கள் பரிசு பெற அழைக்கப்படுவார்கள். இதில் நோபலின் விருப்பப்படி, அமைதிக்கான பரிசு மட்டும் ஒஸ்லோவில் வைத்து வழங்கப்படுகிறது. மற்ற பரிசுகள் ஸ்டாக்ஹோமில் வைத்து நடைபெறும் விழாவில் வழங்கப்படுகின்றன.