EBM News Tamil
Leading News Portal in Tamil

“சாம்பியன் பட்டத்தை தென்னாப்பிரிக்க அணியால் வெல்ல முடியும்” – ரபாடா நம்பிக்கை | ODI WC 2023 | We hope South Africa can win cwc championship Rabada


திருவனந்தபுரம்: உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை தங்கள் அணி வெல்லும் என தாங்கள் நம்புவதாக தென்னாப்பிரிக்க வீரர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார். நாளை ஆப்கானிஸ்தான் அணியுடன் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது தென்னாப்பிரிக்கா.

உலகக் கோப்பையில் இதுவரை அரையிறுதி சுற்று வரை மட்டுமே தென்னாப்பிரிக்கா முன்னேறி உள்ளது. ஆனால், இந்த முறை அந்த வரலாற்றை தங்கள் அணி நிச்சயம் மாற்றும் என ரபாடா தெரிவித்துள்ளார். எதிரணியின் அபார செயல்பாடு, தங்கள் அணி வீரர்கள் செய்யும் தவறுகள் போன்றவற்றை கடந்து மழையும் தென்னாப்பிரிக்க அணியை உலகக் கோப்பை தொடர்களில் இம்சிக்கும்.

“தென் ஆப்பிரிக்கர்களிடம் நம்பிக்கைக்கு துளி அளவும் பஞ்சம் இருக்காது. அதன் அடிப்படையில் உலகக் கோப்பை தொடரில் நாங்கள் பங்கேற்கிறோம். சாம்பியன் பட்டமும் வெல்வோம் என நம்புகிறோம். இந்த முறை எங்களது முதல் இறுதிப் போட்டியில் பங்கேற்று அதை நிஜம் ஆக்குவோம். இது கொஞ்சம் கடினம்தான். அதே நேரத்தில் சிறப்பான அனுபவமாகவும் இருக்கும். உலகின் சிறந்த அணி மற்றும் சிறந்த வீரர்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ள நாங்கள் தயார்.

தனி நபராக உலகக் கோப்பையை வெல்ல முடியாது. அணியின் ஒருங்கிணைப்பு அவசியம். 2019 உலகக் கோப்பை தொடரில் இருந்து நான் பாடம் கற்றுள்ளேன். கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவில் சுமார் 11 ஷார்ட்டர் ஃபார்மெட் கிரிக்கெட் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா விளையாடி உள்ளது. அது இந்தத் தொடரில் எங்களுக்கு பலன் தரும். ஏனெனில், இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் நாங்கள் விளையாடி, அதன் களச் சூழலை அறிந்துள்ளோம்” என ரபாடா தெரிவித்துள்ளார்.