EBM News Tamil
Leading News Portal in Tamil

சனாதன ஒழிப்பு மாநாட்டில் சர்ச்சை பேச்சு – தமிழக அரசு, உதயநிதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் | Supreme Court Notice to Tamil Nadu Government, Udhayanidhi stalin on Sanatana dharma Controversy


புதுடெல்லி: சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதன தர்மம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நவ.10-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் கடந்த செப்.2-ம் தேதி ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்பட்டது. இதில்தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்றும், கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா ஆகியவற்றோடு சனாதன தர்மத்தை ஒப்பிட்டும் அவர் பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டிருந்ததாவது: சென்னையில் நடத்தப்பட்ட சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றது அரசியலமைப்பு சாசனத்துக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். சனாதன தர்மம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது, இந்துக்கள் மத்தியில் வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே, சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தியவர்கள் மீதும், வெறுப்பு பேச்சுக்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சேகர்பாபு, பீ்ட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.

சிபிஐ விசாரணை தேவை: இந்த மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். குறிப்பாக, அதற்கு நிதியுதவி எங்கிருந்து வந்தது என்பதையும், அதற்கான பணம் இந்தியாவுக்கு வெளியே இருந்து வந்துள்ளதா என்பதையும் கண்டறிய உத்தரவிட வேண்டும்.

டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்: இப்படி ஒரு மாநாட்டுக்கு போலீஸார் எப்படி அனுமதி அளித்தனர் என்பது குறித்தும், அதை நடத்தியவர்கள் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்த வேண்டும்.

குறிப்பாக உச்ச நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவுப்படி, வெறுப்பு பேச்சுகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநில அளவில் கண்காணிப்பு அதிகாரியை நியமித்து, மாவட்ட அளவில் குழு அமைக்க தமிழக உள்துறை செயலர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.

தமிழக பள்ளி, கல்லூரிகளில் சனாதன தர்மத்துக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கோரியிருந்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதன் விவரம்: மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் டி.எஸ்.நாயுடு, வள்ளியப்பன்: சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று வெறுக்கத்தக்க வகையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மட்டுமின்றி, மாநாட்டில் பங்கேற்ற மற்றவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

நீதிபதிகள் கேள்வி

நீதிபதிகள்: இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடாமல், நேரடியாக இங்கு வந்து, எங்களை ஏன் காவல் நிலையமாக மாற்றுகிறீர்கள்?

மனுதாரர் தரப்பு: சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்ற தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு, நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழக அரசு, டிஜிபி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, எம்.பி.க்கள் ஆ.ராசா, திருமாவளவன், சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் நவ.10-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.