ODI WC 2023 | சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.33 கோடி பரிசுத் தொகை: ஐசிசி | ODI WC 2023 title winners will get 33 crore prize money ICC
துபாய்: எதிர்வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 33 கோடி ரூபாய் (4 மில்லியன் டாலர்கள்) பரிசுத் தொகையாக வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
‘உலகக் கோப்பை கிரிக்கெட்-2023’ தொடர் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறவுள்ளது. தொடரை இந்தியா நடத்துகிறது. மொத்தம் 48 போட்டிகள். தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த நிலையில் பரிசுத் தொகை குறித்த அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.
தொடரில் பங்கேற்கும் அணிகள் மற்றும் 48 போட்டிகளுக்கு பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற தவறும் ஆறு அணிகளுக்கு சுமார் 82 லட்ச ரூபாய் வழங்கப்பட உள்ளது. அதேபோல குரூப் சுற்றில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிப் பெறும் அணிக்கு சுமார் 33 லட்ச ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியை தழுவும் 2 அணிகளுக்கு சுமார் 6 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
இறுதிப் போட்டியில் இரண்டாவது இடம் பிடிக்கும் அணிக்கு சுமார் 16 கோடி ரூபாயும், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு சுமார் 33 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.