“பிரதமர் மோடியுடன் வெளிப்படையாக பேசினேன்” – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ | Credible Reasons To Believe: Justin Trudeau On Big Charge Against India
நியூயார்க்: பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசியதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார், கனடாவில் கடந்த ஜுன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் கூறியதால் இந்தியா-கனடா உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து பாதுகாப்புக்கு காரணங்களால் கனடாவில் இருந்து இந்தியா வருவதற்கு விசா வழங்கும் சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த விவகாரத்தில் நீதியை நிலைநாட்ட இந்திய அரசாங்கம் தங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கோரிக்கை விடுத்துள்ளார்.
நியூயார்க்கில் செய்தியாளர் சந்திப்பில் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது: “கனடா மண்ணில் கனட குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்கத்தின் ஏஜென்ட்கள் ஈடுப்பட்டுள்ளனர் என்று நம்புவதற்கான நியாயமான காரணங்கள் உள்ளன. இந்திய அரசு இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த விஷயத்தில் முழு வெளிப்படைத் தன்மையுடன் நடந்து, நீதியை நிலைநாட்ட எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
நாங்கள் சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரு நாடு. கனடா மக்களை பாதுகாக்கவும், சர்வதேச அடிப்படையிலான சட்ட ஒழுங்கை நிலைநாட்டவும் நாங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டியுள்ளது. அதில்தான் இப்போதைக்கு எங்களின் கவனம் உள்ளது. நாங்கள் சட்டத்தின் ஆட்சிப்படி நின்று, எந்தவொரு நாட்டிலும் அதன் சொந்த மண்ணில் ஒரு குடிமகன் கொலை செய்யப்படுவது எந்த அளவு ஏற்றுக்கொள்ள முடியாதது என்பதை சுட்டிக் காட்டுகிறோம். நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசினேன். என்னுடைய கவலைகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்”. இவ்வாறு ஜஸ்டின் ட்ரூடோ பேசினார்.