மக்கள் விரோத செயலில் ஈடுபட்டதாக 2 பிஜு ஜனதா தள எம்எல்ஏக்கள் நீக்கம் | 2 Biju Janata Dal MLAs removed for anti people activities
புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவரான நவீன் பட்நாயக், மக்கள் விரோத செயல்கள் குற்றச்சாட்டின் கீழ் 2 எம்எல்ஏக்களை நேற்று கட்சியில் இருந்து நீக்கினார்.
கந்தபடா எம்எல்ஏ சவுமியா ரஞ்சன் பட்நாயக், ரெமுனா எம்எல்ஏ சுதன்சு சேகர் பரிடா ஆகிய இருவரும் பிஜேடி-யில் நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சவுமியா ரஞ்சன், ‘சம்பத்’ என்ற ஒடியா நாளிதழின் உரிமையாளரும் ஆசிரியரும் ஆவார். இவர் ஏற்கெனவே கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். இவர் தனது பத்திரிகையில் தனது சொந்த கட்சிக்கு எதிராக 2 தலையங்கங்களை எழுதினார். முதல்வரின் தனிச்செயலாளர் வி.கே.பாண்டியன் தனது அதிகாரப்பூர்வ பதவிக்கு அப்பாற்பட்டு செல்வாக்கு செலுத்தி வருவதாக அவர் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் சவுமியா ரஞ்சனுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் ஒடிசா காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு மோசடி வழக்கு பதிவுசெய்ததை தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட ரூ.3 கோடி அரசு மானியத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக ரெமுனா எம்எல்ஏ சுதன்சு சேகர் பரிதா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் அவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.