சென்னையில் இன்று மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் | District Junior Athletics Championship today in Chennai
சென்னை: சென்னை மாவட்ட 53-வது ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் இன்று (14-ம் தேதி) தொடங்குகின்றன.
2 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 1,300 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். இதில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள் வரும் செப்டம்பர் 14 முதல் 17-ம் தேதி வரை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.
சென்னை மாவட்ட ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் சிறுவர் பிரிவில் 53 போட்டிகளும், சிறுமியர் பிரிவில் 53 போட்டிகளும் நடைபெறுகின்றன. 12, 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் ஓபன் பிரிவில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறுவர் பிரிவில் அணி சாம்பியன்ஷிப், சிறுமியர் பிரிவில் அணி சாம்பியன்ஷிப் வழங்கப்படும். இத்தகவலை சென்னை மாவட்ட தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.