யாங்கூன்: ராணுவத்துக்கு எதிராக போராடினால் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று போராட்டக் காரர்களுக்கு மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது.
ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை கண்டித்து மியான்மரில் மக்கள் வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. சில நாட்களுக்கு முன்பு ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியுள்ளது. இதனை தொடர்ந்து ஆங் சான் சூகி, அந்த நாட்டின் அதிபர் வின் மைண்ட் உள்பட 100க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் தடுப்புக்காவலில் வைத்தது.