24 மணிநேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட கொரோனா உயிரிழப்புகளைச் சந்தித்த நாடு..!
கொரோனா வைரஸ் பாதிப்பால் 24 மணி நேரத்தில் 2000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை பதிவு செய்த முதல் நாடு அமெரிக்கா என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பின் வீச்சு, உலகின் வேறெந்த நாட்டிலும் இல்லாதது. அமெரிக்காவில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் உள்ள ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் ஒன்றரை லட்சம் மட்டுமே. அதாவது முதல் இடத்தில் உள்ள அமெரிக்காவுக்கும், இரண்டாம் இடத்தில் உள்ள ஸ்பெயினுக்கும் இடையிலான வித்தியாசம் சுமார் 3 லட்சம் என்ற அளவில் உள்ளது.
அதுமட்டுமல்ல. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மட்டும் ஒரு லட்சத்து 61 ஆயிரம். இது இரண்டாமிடத்தில் உள்ள ஸ்பெயினில் ஏற்பட்டுள்ள பாதிப்பை விட அதிகமாகும். நியூயார்க்கில் 9 ஆம் தேதி மட்டும் 799 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்து.
அதற்கு முந்தைய நாளான 8 ஆம் தேதி நியூயார்க்கில் உயிரிழப்பு 779 ஆக இருந்தது. இதுவரை நியூயார்க்கில் சுமார் ஏழாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2108 பேர் உயிரிழந்து, ஒரே நாளில் அதிகம் பேர் உயிரிழந்த முதல் நாடு அமெரிக்கா என்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது. உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிக்க ஆதரவற்ற சடலங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதையடுத்து உரிமை கோரப்படாதோரின் உடல்கள் நியூயார்க்கில் உள்ள ஹார்ட் தீவில் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. உரிமை கோரப்படாத உடல்கள் ஹார்ட் தீவில் மொத்தமாக அடக்கம் செய்யப்படும் வீடியோ வெளியாகி அனைவரையும் கலங்கவைத்துள்ளது.
கொரோனாவை சீன வைரஸ் என டிரம்ப் விமர்சித்து வந்த நிலையில், அமெரிக்காவிற்கு கொரோனா வைரஸ் ஐரோப்பியாவில் இருந்தே பரவியுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. எகிப்தின் சினாய் மவுன்டில் உள்ள இகான் ஸ்கூல் ஆப் மெடிசின் நிறுவனம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. சீனாவில் வைரஸ் பரவத் தொடங்கிய போது சீனர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்த டிரம்ப், ஐரோப்பியர்களை தடையின்றி அனுமதித்தார். இதுவே அமெரிக்காவில் கொரோனா பரவ காரணமாகி விட்டது.சீனா, ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவில் பரவியுள்ள கொரோனா வைரசின் மரபணு மாதிரிகளை ஆய்வு செய்ததில் அமெரிக்காவில் பரவியது ஐரோப்பிய மரபணுவே என்பது தெரியவந்துள்ளது. மார்ச் முதல் வாரத்தில் தான் அமெரிக்காவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. ஆனால் பிப்ரவரி 2வது வாரமே, நியூயார்க்கில் கொரோனா மையம் கொண்டு விட்டதாகவும், அப்போதே கண்டறிந்திருந்தால் பாதிப்பை பெருமளவு தடுத்திருக்க முடியும் என்றும் ஆய்வறிக்கை கூறியுள்ளது. இனியேனும் கடுமையான கட்டுப்பாடுகளை கடைபிடித்து கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.