வரலாற்றில் நாம் எதிர்கொள்ளாத ஒன்று.. பலர் பலியாக போகிறார்கள்.. அமெரிக்கர்களுக்கு டிரம்ப் வார்னிங்!
நியூயார்க்: கொரோனா தாக்குதல் காரணமாக வரும் வாரங்களில் அமெரிக்கர்கள் பலர் பலியாக வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்குதல் மூலம் மிக மோசமான பாதிப்பை சந்தித்த நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. உலகிலேயே அமெரிக்காதான் மிக மோசமான சரிவை, இந்த கொரோனா வைரஸால் சந்தித்து இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனாவால் 311,637 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மொத்தம் இதுவரை 8454 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இன்று மட்டும் 300 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 14,828 இதுவரை குணமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் அதிபர் டிரம்ப் தனது பேட்டியில், அமெரிக்காவில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் மருந்துகளை அனுப்ப உத்தரவிட்டு உள்ளேன். மருந்துகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பிற மாகாணங்களில் இருந்து மிக மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளை நியூயார்க், டல்லாஸ், வாஷிங்டன் மருத்துவமனைகளுக்கு அனுப்ப விரும்பினால் அனுப்பலாம். இதற்கு நாங்கள் அனுமதி அளித்து உள்ளோம்.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம்.நான் இந்த வானையும், மண்ணையும் புரட்டி போட்டு கூட, அமெரிக்காவை காக்க தயாராக இருக்கிறேன். நான் இதற்காக ராணுவத்தை களமிறக்க முடிவு செய்துள்ளே. அதோடு பல மாகாணங்களில் இருந்து செவிலியர்கள், மருத்துவர்கள், மற்ற தேவையான பணிகளை செய்யும் நபர்கள் என்று பலரை களமிறக்க போகிறோம். அரசுக்கு உதவ ராணுவம் வருகிறது. நாம் ஒரு போருக்கு செல்கிறோம்.
இத்தனை வருடம் அவர்கள் எதற்காக பயிற்சி எடுத்தார்களோ அந்த போருக்காக அவர்கள் தயாராகி வருகிறார்கள். இதை நாம் இன்னும் நீட்டிக்க முடியாது . நாம் சீக்கிரம் நமது நாட்டை இயங்க செய்ய வேண்டும். நாம் ஊரடங்கை இன்னும் பல மாதங்களுக்கு தொடர்ந்து நீட்டித்துக் கொண்டு இருக்க முடியாது. நாம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். நம் பொருளாதாரம் மோசமாகிக் கொண்டு இருக்கிறது.