இங்க அடிச்சாலும் அங்க வலிக்கும்.. கொரோனா மற்ற நாடுகள பாதிச்சாலும்.. சீனாவுக்கு அடி தான்.. எப்படி..!
பெய்ஜிங்: சீனாவின் சிறந்த தோற்றுவிப்பான கொரோனா வைரஸினால் இன்று உலகமே அரண்டு போயுள்ளது. சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்திருந்தாலும், அதை விட பல மடங்கு மற்ற நாடுகளுக்கும் அதுவும் படு வேகமாக பரவி வருகிறது.
அதிலும் வல்லரசு நாடான அமெரிக்கா இந்த கொரோனாவில் பெரும் பிரச்சனையை சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டில் இதுவரை 3,11,637 பேருக்கும் கொரோனாவின் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதே 8,454 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
முதன் முதலாக சீனாவின் வுகான் மாகாணத்தில் தோன்றிய இந்த கொடிய வைரஸினால், சீனா முழுவதும் முடங்கியது எனலாம். கடந்த டிசம்பர் மாத பிற்பகுதியில் ஆரம்பித்த இந்த வைரஸின் தாக்கம், கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இந்த நிலையில் தற்போது இயல்பு திரும்பிக் கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், மார்ச் மாத இறுதியில் இருந்தே சீனா தொழிலாளர்கள் தங்களது பணிக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர்.
ஆக சீனாவில் தற்போது வழக்கம்போல உற்பத்தி ஆரம்பித்து இருந்தாலும், சீனாவுக்கு மேலும் தொடர்ந்து பாதிப்பு இருக்கத்தான் செய்யும் என்கிறார்கள் ஆய்வாளார்கள். ஏனெனில் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பெரும்பாலான பொருட்கள் உலகம் முழுக்க இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீனாவின் ஜிடிபி விகிதத்தில் கணிசமான அளவு இதில் அடங்கும்
இந்த நிலையில் கடந்த பிப்ரவரி ஜனவரியில் ஏற்பட்ட படுவீழ்ச்சிக்கு பிறகு, சீனா தொழில்சாலைகள் மார்ச்சிலிருந்து விரிவடைய தொடங்கியுள்ளது. அதிலும் சீனாவின் முக்கிய நகரமான பெய்ஜிங் மற்றும் ஹூபே மாகாணம் பெரும்பாலும் கடந்த சில மாதங்களாக பூட்டப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது. இதனால் சீனாவின் உற்பத்தி அந்த சமயத்தில் மிக குறைந்திருந்தது.