உலக மசாலா: இரட்டையரை மணந்த இரட்டையர்! நல்ல காதலர்!
அமெரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இரட்டையராகப் பிறந்த இரண்டு பெண்களுக்கும் இரட்டையராகப் பிறந்த இரண்டு ஆண்களுக்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 32 வயதான பிரிட்டானியும் பிரையனாவும் 34 வயது ஜெரமி, ஜோஸை மணந்திருக்கிறார்கள். “இரட்டையராகப் பிறந்த நாங்கள் 32 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்திருக்கிறோம். ஆரம்பத்தில் இரட்டையராகப் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் எங்களால் எங்கோபிறந்த இரு வெவ்வேறு ஆண்களிடம் பழகவே முடியவில்லை. அவர்களால் இரட்டையரின் மனநிலையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால்தான் எங்களைப்போலவே இரட்டையராகப் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தோம். அது அவ்வளவு எளிதான காரியமாக இருக்கவில்லை. கடந்த ஆண்டு ‘இரட்டையர் தின விழா’ நடைபெற்றது. அதில் நாங்களும் பங்கேற்றோம். அங்கேதான் இந்த இரட்டையரைச் சந்தித்தோம். பார்த்த உடனே இவர்களைப் பிடித்துவிட்டது. அவர்களுக்கும் எங்களைப் பார்த்தவுடன் பிடித்துவிட்டதாகப் பின்னர் சொன்னார்கள். அடுத்தடுத்து இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகு, எங்களுக்குள் நல்ல புரிதல் ஏற்பட்டது. தேவதைக் கதைகளில் வரும் திருமணத்தைப் போன்று, அழகாக நடைபெற்றது எங்கள் திருமணம். நாங்கள் நால்வரும் ஒரே வீட்டில் வசிக்கப் போகிறோம்” என்கிறார் பிரிட்டானி.
ஹோண்டுராஸைச் சேர்ந்த ரோசா காஸ்டெல்லனோயாஸும் மெல்வின் மென்டோஸும் காதலர்கள். ரோசா தான் கர்ப்ப மாக இருப்பதாகச் சொல்லி, மெல்வினிடமிருந்து பிரிந்து, வேறு ஒரு நகரில் 9 மாதங்கள் வசித்தார். கடந்த வாரம் மருத்துவமனையில் சேர்ந்து, இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். மெல்வினை அலைபேசியில் அழைத்து, இரண்டு குழந்தைகளில் ஒன்று பிரசவத் தின்போது இறந்துவிட்டதாகவும் மற்றொரு குழந்தை, மருத்துவர்களின் சிறப்புக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார். மூடப்பட்ட சிறு கூடையுடன் சனிக்கிழமை வீடு திரும்பினார். மெல்வினும் அவரது நண்பர்களும் குழந்தையின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிக்காக வந்திருந்தனர். கூடையைத் திறந்து குழந்தையின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டனர். கூடையைத் திறக்கக் கூடாது என்று மருத்துவர்கள் எச்சரித்திருப்பதாகச் சொன்னார் ரோசா. சடங்குகள் நடத்தப்பட்டு, கூடை புதைக்கப்பட்டது. மெல்வினின் நண்பர்களுக்கு ரோசா பொய் சொல்கிறார் என்று தோன்றியது. அதனால் இரவில், புதைத்த கூடையை வெளியே எடுத்தனர். திறந்து பார்த்தபோது, ஒரு பொம்மை இருந்தது. எல்லாவற்றையும் வீடியோ எடுத்து, மெல்வினிடம் காட்டினார்கள். ரோசா கர்ப்பமாகவே இருக்கவில்லை. எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார். காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டும் என்றார்கள். “ரோசா மீது புகார் கொடுக்க நான் விரும்பவில்லை. என் நண்பர்கள் கண்டுபிடித்தது நிஜமாகவே இருந்தாலும் அதுவும் நல்லதுதான். இரண்டாவது குழந்தை பிறந்து இறந்ததைவிட, பிறக்காமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்கிறார் மெல்வின்.