அணுஆயுத சோதனை நடத்தும் வடகொரியா : ஐநா குற்றச்சாட்டு
வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளை நடத்தி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை வடகொரியா மீறிவிட்டதாகவும் இதற்கு ரஷ்யா உதவியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை வெள்ளிக்கிழமையன்று ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரகசியமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வடகொரியா மீது அமெரிக்க விதித்த பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீறுவதை அமெரிக்கா கண்டித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோ கூறும்போது,” ரஷ்யாவின் செயல் கண்டித்தக்கது. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் ட்ரம்ப்புக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் ட்ரம்ப்பும் கடந்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேசினர். அப்போது, அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவும் அந்த நாட்டுக்குப் பாதுகாப்பு அளிக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்டன.
இது தொடர்பாக ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தச் சந்திப்புக்குப் பிறகு, அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கை உடனடியாகத் தொடங்கும் என்று ட்ரம்ப் கூறியிருந்தார்.
இதனிடையே, இந்த விவகாரத்தில் அமெரிக்கா கூலிப்படைத் தலைவனைப் போலச் செயல்படுவதாக வடகொரியா குற்றம் சாட்டியது. மேலும் உயர்நிலைப் பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா விதித்த நிபந்தனைகள் பிரச்சினைக்குரியவை எனவும் வடகொரியா கூறியிருந்தது.