உலக மசாலா: பொம்மை கையெழுத்து!
பெரு நாட்டைச் சேர்ந்த 31 வயது ஜுவான் கார்லோஸ் வாரில்லாஸின் கையெழுத்தைச் சமூகவலைத் தளங்களில் வெளியிட்ட ஐந்தாவது நிமிடத்தில் பிரபலமாகிவிட்டார். கையெழுத்துக்குப் பதிலாக ஒரு பொம்மையை வரைந்து, அதைத்தான் கையெழுத்தாகப் பயன்படுத்தி வருவதாகச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய அடையாள அட்டை, முக்கிய ஆவணங்களில் எல்லாம் கையெழுத்துக்குப் பதில் பொம்மையைத்தான் வரைந்திருக்கிறார். சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டுத் தொடர்பாக ஜுவானையும் அவரது நண்பர்களையும் காவல்துறை கைது செய்தது. கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவித்தது. பிறகுதான் அவர்கள் இட்ட கையெழுத்துகளில் ஒன்று படமாக இருந்ததைக் கண்டனர். ஜுவானை அழைத்துக் காரணம் கேட்டனர். கிட்டி என்ற பொம்மையை மிகவும் பிடிக்கும் என்பதால், 16 வயதிலிருந்து அடையாள அட்டையில் பயன்படுத்த ஆரம்பித்து, அதையே கையெழுத்தாகத் தொடர்ந்து வருவதாகச் சொன்னார். இனிமேல் இப்படிப் படம் போடக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள்.
மாற்றி யோசித்திருக்கிறார்!
கொலம்பியாவில் வசிக்கும் சோம்ப்ரா என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாய், காவல்துறையில் பணியாற்றி வருகிறது. வழக்கமான நாய்களை விட சோம்ப்ராவுக்கு நுண்ணுணர்வு அதிகம். அபாரமான மோப்ப சக்தியின் மூலம் பல கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறது. இதனால் அரசாங்கத்துக்கும் காவல்துறைக்கும் செல்லப் பிராணியாக இருந்துவருகிறது. போதைப் பொருள் கடத்தல்காரர்கள் சோம்ப்ரா மீது கடுங்கோபம் அடைந்தனர். தற்போது இந்த 6 வயது நாயைக் கொல்பவருக்கு சன்மானத்தை அறிவித்திருக்கின்றனர். 2016-ம் ஆண்டு 2,958 கிலோ கொகெய்ன் ஹைட்ரோகுளோரைடைக் கண்டுபிடித்து கொடுத்தபோது, தலைப்புச் செய்திகளில் இடம்பெற ஆரம்பித்தது சோம்ப்ரா. கடந்த மே மாதம் பெல்ஜியத்துக்கு அனுப்ப இருந்த 1.1 டன் கொகெய்னைக் கண்டுபிடித்தது. பிறகு 5.3 டன் போதைப் பொருட்களைக் கண்டுபிடித்து, மக்களின் அன்பைப் பெற்றது. இதுவரை சட்டத்துக்குப் புறம்பாகப் போதைப் பொருள் கடத்தும் 242 பேர், சோம்ப்ரா மூலம் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கடத்தல்காரர்கள் அதிக அளவில் தங்களது பணத்தை இழந்திருக்கிறார்கள். அவர்களது தொழில் நலிவடைந்திருக்கிறது. அவர்கள் காரணத்தை ஆராய்ந்தபோது, சோம்ப்ராவால்தான் இந்த நஷ்டம் ஏற்பட்டதாக உணர்ந்தனர். ரேடார் மூக்கு கொண்ட இந்த நாயை எப்படியாவது கொன்று விட வேண்டும் என்று முடிவு செய்தனர். நாயைக் கொல்பவருக்கு 5 லட்சம் முதல் 48 லட்சம் வரை சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவித்திருக்கின்றனர். இதுவரை ஒரு நாயின் தலைக்கு இவ்வளவு சன்மானம் அளிக்கப்பட்டு யாரும் கேள்விப்பட்டதில்லை என்பதாலும் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கணிசமான பங்கு வகித்திருப்பதாலும் சோம்ப்ராவைப் பாதுகாப்பதில் காவல்துறை அதிக அக்கறை காட்டி வருகிறது. கொலம்பியாவின் மிக ஆபத்தான போதைப் பொருள் கடத்தல் நிறுவனம் சன்மானம் அறிவித்த பிறகு, சோம்ப்ராவுக்குக் காவல் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. டர்போ விமான நிலையத்திலிருந்து உராபா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறது. இவற்றைப் பற்றியெல்லாம் ஒன்றும் அறியாத சோம்ப்ரா, பாதுகாவலர்கள் புடை சூழ, தன் பணியைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
கடத்தல்காரர்களைக் கதிகலங்க வைத்த சோம்ப்ரா!