ட்ரம்ப்பின் அழைப்பை நிராகரித்த ஈரான்
ட்ரம்ப்பின் வார்த்தையும் செயலும் ஒன்றுக்கொன்று முரணாக உள்ளதாகக் கூறி அவரது அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரான் – அமெரிக்கா இடையே மோதல் வலுத்துவரும் நிலையில் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானியை நிச்சயமாக சந்திப்பேன் என்று இத்தாலி அதிபருடன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து ட்ரம்ப்புக்கு ஈரான் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப்பின் இந்த அழைப்பை செவ்வாய்க்கிழமை ஈரானின் மூத்த ராணுவ அதிகாரிகள் நிராகரித்தனர். ட்ரம்ப்பின் செயலும், சொல்லும் ஒன்றுக்கொன்று முரணானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “எங்களது கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நசுக்குவதற்கு அமெரிக்கா மேற்கொள்ளும் புதிய பிரச்சாரங்களுக்கு ஈரான் வழிவகுக்காது” என்றார்.
ஈரான் – அமெரிக்கா மோதல்
2015-ம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக அவர் விமர்சித்து வந்தார்.
பின்னர் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது.