ரஷ்யா வருமாறு கிம்முக்கு புதின் அழைப்பு
ரஷ்யா வருமாறு அந்நாட்டு அதிபர் புதின் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
ரஷ்ய அதிபர் புதின் வடகொரியாவின் மூத்த அதிகாரி கிம் யோங் நம்மை மாஸ்கோவில் சந்திந்துப் பேசினார். அப்போது அவரிடம் வடகொரிய அதிபர் கிம்மை ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதில், புதின் ”நான் வடகொரியா உடனான உறவை மீண்டும் நீட்டிக்க விரும்புகிறேன், அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை ரஷ்யாவுக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.
புதின் -கிம் இடையேயான சந்திப்பு வரும் செப்டம்பர் மாதம் நிகழலாம் என்றும், இதற்கான ஏற்பாடுகள் விரைவில் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையே மிகவும் கடுமையான வார்த்தை மோதல் நடந்தது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக ட்ரம்பும் – கிம்மும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் செவ்வாய்க்கிழமை சிங்கப்பூரில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்துப் பேசினர். இந்த நிலையில் கிம்மை புதின் ரஷ்யாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.