EBM News Tamil
Leading News Portal in Tamil

இனி பிரச்சினை இல்லை… நிம்மதியாக உறங்குங்கள்: ட்ரம்ப் ட்வீட்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உடனான சந்திப்புக்குப் பிறகு அமெரிக்க சென்ற ட்ரம்ப் இனி பிரச்சினை இல்லை, நிம்மதியாக உறங்குங்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணு ஆயுத சோதனை நடத்தி வந்தது. இதனால் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே மிகவும் கடுமையான வார்த்தை மோதல் நடந்தது.
இரு நாடுகளும் தங்கள் ராணுவ பலம் மற்று அணு ஆயுத பலத்தை ஒப்பிட்டு வார்த்தைப் போரில் ஈடுபட்டனர். மேலும் அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து ராணுவப் பயிற்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஈடுபட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவியது. அத்துடன் வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் சபை பொருளாதாரத் தடை விதித்தது.
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ட்ரம்பும் – கிம்மும் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் கேபெல்லா ஓட்டலில் சந்தித்துப் பேசினர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பின்போது, அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது. மேலு ட்ரம்ப் – கிம் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, வடகொரியாவுக்கு வருமாறு ட்ரம்புக்கு கிம் அழைப்பு விடுத்ததாகவும் இதுபோல அமெரிக்காவுக்கு வருமாறு கிம்முக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்தார்.
இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்தப் பிறகு நாடு திரும்பிய ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நீண்ட பயணத்துக்கு பிறகு தரையிறங்கி இருக்கிறேன். நான் பதவியேற்ற நாளைவிட தற்போது அனைவரும் பாதுகாப்பாக உணர்வார்கள். இனி வடகொரியாவிடமிருந்து அணுஆயுதங்கள் குறித்த எந்த அச்சுறுத்தலும் இருக்காது. வடகொரிய அதிபர் கிம்மை சந்தித்தது நல்ல அனுபவமாக இருந்தது. வடகொரியாவுக்கு சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளது.
நான் அதிபராக பதவியேற்பதற்கு முன்புவரை வடகொரியாவுடன் அமெரிக்கா போர் புரியும் என மக்கள் நினைத்தனர். வடகொரியா நமது மிகப்பெரிய பிரச்சினை என அதிபர் ஒபாமா கூறியிருந்தார். இனி எந்த பிரச்சனையும் இல்லை. இன்று நன்கு உறங்குங்கள் என்று பதிவிட்டுள்ளார்.