EBM News Tamil
Leading News Portal in Tamil

மதுபான தயாரிப்பில் இறங்கியது கோகோ கோலா – பீருக்கு போட்டியாக புதிய பானம்

உலகின் புகழ் பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா, தற்போது மதுபான தயாரிப்பிலும் இறங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ கோலா உலகம் முழுவதும் வர்த்தகம் செய்து வருகிறது. பல நாடுகளில் தங்கள் தயாரிப்புகளை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. அந்தந்த நாடுகளின் முக்கிய குளிர்பான நிறுவனங்களுடன் இணைந்தும் தனது தொழிலை விரிவுபடுத்தி வருகிறது.
இந்நிலையில், கோகோ கோலா நிறுவனம் முதன்முறையாக மதுபானத்தை அறிமுகம் செய்துள்ளது. ஜப்பான் நிறுவனத்துடன் இணைந்து கோகோ-கோலா நிறுவனம் மதுபான விற்பனையை தொடங்கியுள்ளது.
லெமன்-டோ என்ற இந்த மதுபானம் எலுமிச்சையின் சுவையுடன் கூடிய மதுபானமாகும். அதில் ஆல்கஹாலின் அளவு 3 முதல் 7 சதவீதம் வரை கலக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் விற்பனை செய்யும் பீர் மதுபானத்தை போலவே இதன் தன்மையும் இருக்கிறது. எனவே எதிர்காலத்தில் பீருக்கு போட்டியாக இந்த புதிய மதுபானம் உருவெடுக்கும் என கோகோ கோலா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
350 மில்லி லிட்டர் அளவு கொண்ட டின்களில் இந்த மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 90 ரூபாய் ஆகும்.
இந்த மதுபானம் கலந்த குளிர்பானம், ஆண்களை மட்டுமின்றி, இளம் பெண்களையும் கவர்ந்திழுக்கும் என கோகோ கோலா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தற்போது ஜப்பானில் மட்டும் விற்பனை செய்யப்படும் இந்த மதுபானம், அதன் வெற்றியை பொறுத்து மற்ற நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.