Ultimate magazine theme for WordPress.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமியுடன் 41 வயது ஆணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 16 வயது சிறுமியுடன் 41 வயது ஆணுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து, திருமணத்தை நடத்தி வைத்த பெண்ணின் தந்தையும், புதுமாப்பிள்ளையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே கழனிபாக்கம் கிராமத்தை சேர்ந்த பொன்னுசாமி என்பவர் விவசாயம் செய்து வருகிறார். பொன்னுசாமியின் முதல் மனைவி ஜெயந்தி சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டார்.

 

இதையடுத்து, பொன்னுசாமி ரோஜா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு ஜெயந்திக்கு பிறந்த தாட்சாயணி (வயது 16) பள்ளிகொண்டாவில் உள்ள அரசுப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.

 

இந்நிலையில் பொன்னுசாமி திடீரென ஒக்கனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த உறவினரான சுரேஷ் என்கின்ற சேட்டு (41) என்பவருக்கு நிச்சயம் செய்துள்ளார். தொடர்ந்து, 16ஆம் தேதி நேற்று கழனிபக்கத்தில் உள்ள சிவன் கோவிலில் வைத்து இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

 

இதுகுறித்து மாவட்ட ஊர் நல அலுவலர் (மகளிர்) அதிகாரிக்கு 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பதாக போன் மூலம் சமூக ஆர்வலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஊர் நல அலுவலர் (மகளிர்) விஜயலட்சுமி மற்றும் பள்ளிகொண்டா போலீசார் நேரில் சென்று விசாரணை செய்ததில் சிறுமிக்கு திருமணம் செய்தது உண்மை என தெரியவந்தது.

 

இதையடுத்து, மாவட்ட ஊர் நல அலுவலர் (மகளிர்) விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் மாப்பிள்ளை சுரேஷ் பெண்ணின் தந்தை பொன்னுசாமி தாயார் ரோஜா உட்பட 3 பேர் மீது 205/2021 பிரிவு 9,10,11, Prohibition of Child Marriage Act 2006 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

 

பின்னர் பெண்ணின் தந்தை பொன்னுசாமி மற்றும் புது மாப்பிள்ளை சுரேஷ் என்கின்ற சேட்டு இருவரையும் கைது செய்து பள்ளிகொண்டா போலீசார் சிறையில் அடைத்தனர்.

 

16 வயது சிறுமிக்கும் 41 வயது ஆணுக்கும் திருமணம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave A Reply

Your email address will not be published.