தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிதமான மழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை
வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இந்தநிலையில், உள் தமிழகம், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக கோயமுத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
அடுத்த 24 மணி நேரத்திற்கு கேரளாவை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் சூறைக்காற்றின் வேகம் 40-50 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல வடக்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் சூறை காற்று வேகம் 40-50கி.மீ வேகத்தில் இருக்கும் என்பதால் அந்தப் பகுதியிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.அடுத்த 48 மணி நேரத்திற்கு வெப்ப சலனம் காரணமாக சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் 6செ.மீ, காஞ்சிபுரம் மாவட்டம் தரமணியில் 5 செ.மீ, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 4செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.