Ultimate magazine theme for WordPress.

அரிசி உற்பத்தி புள்ளி விபரம்; மூட்டை மூட்டையாக பொய் சொல்லும் தமிழக அரசு: ஸ்டாலின் சாடல்

தமிழ் நாட்டில் அரிசி உற்பத்தி குறைந்ததை மறைத்து அதிமுக அரசு வெளியிட்ட புள்ளி விபரங்கள், மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையால் வெளிப்பட்டுவிட்டது, அதிமுக ஒழுங்கான உற்பத்தி அறிக்கையை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தரும் புள்ளி விவரங்கள் நம்பகத்தன்மை வாய்ந்தவைதானா என்ற பலத்த சந்தேகம் பல தரப்பினரிடமும் ஏற்பட்டிருக்கிறது. காரணம், அரிசி உற்பத்தி குறித்து மாநில அரசு தந்துள்ள புள்ளி விவரத்திற்கும், “ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா” வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும் இடையிலான பெருமளவு வேறுபாடுகள் தான்.
இதனை இன்றைய ஆங்கில நாளேடு ஒன்று தெளிவாகச் சுட்டிக்காட்டி ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2013-14 மற்றும் 2014-15ஆம் ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நெல் விளைச்சலில் ‘பம்பர் அறுவடை’ நடந்ததாக ஜெயலலிதா தலைமையிலிருந்த அ.தி.மு.க. அரசு ஊரெங்கும் தம்பட்டம் அடித்துக்கொண்டது.
அரசின் புள்ளி விவரப்படி, 2013-14-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன்களாகும். அதுபோல 2014-15-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன்கள் என தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது. அதே நேரத்தில், இந்த இரண்டு ஆண்டு காலத்திற்கான அரிசி உற்பத்தி குறித்து, மத்திய ரிசர்வ் வங்கி மே 2018-ல் வெளியிட்டுள்ள இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரங்கள் தொடர்பான கையேட்டில் (Handbook of Statistics on Indian States) 2013-14-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள் என்றும், 2014-15-ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள் என்றும் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் பார்க்கும்போது, 2013-14ஆம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 18 லட்சம் டன்களும், 2014-15ஆம் ஆண்டின் அரிசி உற்பத்தியை ஏறத்தாழ 22 லட்சம் டன்கள் அளவுக்கும் தமிழ்நாடு அரசின் புள்ளி விவரம் செயற்கையாக உயர்த்திக் காட்டியிருப்பது தெரியவருகிறது.
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறை தந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில், தனது கையேட்டில் தகவல்கள் பதிப்பிக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா தெரிவிக்கின்ற நிலையில், மாநிலத்தை ஆளும் அ.தி.மு.க. அரசு தந்துள்ள புள்ளிவிவரங்கள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறிக்குள்ளாகிறது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் அதிம.க ஆட்சியில் அதன் பிற்போக்குத்தனமான அணுகுமுறையினால், விவசாயிகளின் தற்கொலையும் பட்டினிச் சாவுகளும் அதிகரித்து வரும் நிலையில், அரிசி உற்பத்தியில் ‘பம்பர் சாதனை’ படைத்ததாகக் காட்டிக்கொண்டு, உண்மையை மறைக்க இப்படி இட்டுக்கட்டி பொய்யான புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வழங்குகிறார்களோ என்ற ஐயமும் எழுகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் சட்டமன்றம் தொடங்கி மக்கள் மன்றங்கள் வரை சரியான புள்ளிவிவரங்கள் தரப்படுவதில்லை. சில தருணங்களில், நீதிமன்றத்திலேயே திசைதிருப்பக்கூடிய வகையில் தவறான புள்ளிவிவரங்களை அளித்து குட்டுப்பட்டதுடன், அதன் காரணமாக தமிழகத்தின் உரிமைகள் பறிபோனதும் உண்டு. முழுமையான விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் எனப் பல முறை வலியுறுத்தியபோதும், எந்த ஒரு துறை சார்பாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட அ.தி.மு.க. அரசு தயாராக இல்லை.
அதற்கு மாறாக, அதிமுக ஆட்சியாளர்கள் தருகின்ற கருப்புப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அரிசி உற்பத்தி போல, மூட்டை மூட்டையாகப் பொய் சொல்லும் வகையில்தான் அமைந்துள்ளனவோ? மக்களை ஏமாற்றுவதற்காகவே புள்ளி விவரங்களை ஆட்சியாளர்கள் வெளியிடுகிறார்களோ?
ஜனநாயக மாண்புகளைக் குழிதோண்டிப் புதைக்கும் அதிமுக ஆட்சியாளர்கள், தங்களை ஆட்சியில் அமர்த்திய மக்களிடம் பொய்யையும் புரட்டையும் புளுகையும் காட்டி, இதுபோல தொடர்ந்து ஏமாற்ற நினைத்தால், அந்த மக்களே சரியான நேரத்தில் தக்க பாடம் புகட்டுவார்கள் என எச்சரிப்பதுடன், அரிசி உற்பத்தி தொடர்பான முழுமையான உண்மையான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.