உலகக் கோப்பை கால்பந்து போட்டியை முன்னிட்டு அஞ்சல்துறை சார்பில் சென்னையில் சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கி உள்ள நிலையில், அஞ்சல்துறை சார்பில் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் அஞ்சல்தலை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், பிரபல கால்பந்து வீரர் பீலே உள்ளிட்ட பிரபலமான வீரர்களின் அஞ்சல்தலைகள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து, சென்னை நகர மண்டல அஞ்சல்துறை தலைவர் ஆர்.ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘சென்னை, அண்ணா சாலை தலைமை அஞ்சலக வளாகத்தில் உள்ள முதல் மின்சார திரை யரங்கக் கட்டிடத்தில் நிரந்தர தபால்தலை கண்காட்சி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. தபால்தலை சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத் தும் விதமாக இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1,800 மாணவர்களும் ஏராளமான பொதுமக்களும் இந்தக் கண்காட்சியைப் பார்த்து ரசித் துள்ளனர்.
மாதம்தோறும் ஒரு தலைப்பின் அடிப்படையில் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி, தற்போது ரஷ்யாவில் உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடங்கியுள்ள நிலையில், இந்த மாதம் கால்பந்து மற்றும் ரஷ்யா என்ற கருத்தின் அடிப்படையில் தபால்தலை கண்காட்சி நடை பெறுகிறது. இதில், தென்னிந்திய தபால்தலை சேகரிப்போர் சங்கத்தின் செயலாளர் ரோலண்ட்ஸ் ஜே.நெல்சன் சேகரித்த ரஷ்ய நாட்டு தபால்தலைகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
அத்துடன், கால்பந்து தயாரிக் கப் பயன்படும் பொருட்களால் தயாரிக்கப்பட்ட தபால்தலைகள் மற்றும் பிரபல கால்பந்து வீரர்களான பீலே உள்ளிட்ட புகழ்பெற்ற கால்பந்து வீரர்களின் தபால்தலைகளும் கண்காட்சி யில் இடம் பெற்றுள்ளன.
மேலும், லெனின் நினைவாக வெளியிடப்பட்ட முதல் தபால்தலை மற்றும் ரஷ்ய அரசால் கவுரவிக்கப்பட்ட இந்திய பிரபலங்களின் தபால்தலைகள் உள்ளிட்ட அரியவகை தபால்தலைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கண்காட்சி அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் 6 மணி வரை திறந்திருக்கும். பொதுமக்கள் ரூ.300 செலுத்தி தங்களது புகைப்படங்களை தபால்தலைகளில் அச்சிட்டு உடனுக்குடன் பெறும் மை ஸ்டாம்ப்பும் கண்காட்சியில் விற்பனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரூ.200 செலுத்தி தபால்தலை சேகரிப்பு வைப்பு கணக்குத் தொடங்குவதற்கான வசதியும் செய்யப்பட்டுள்ளது. இக் கணக்குத் தொடங்குபவர் களுக்கு அஞ்சல்துறை சார்பில் வெளியிடப்படும் தபால்தலைகள் அவர்களது வீட்டுக்கே சென்று வழங்கப்படும்’ என்று தெரிவிக் கப்பட்டுள்ளது.