பேட்ஸ்மென்களை நீக்குவதற்கு முன்பாக போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும்: கங்குலி கருத்து
மிகப்பெரிய, உலகத்தரம் வாய்ந்த இரண்டு இன்னிங்ஸ்களை ஆடி இந்திய அணியை தனிநபராக வெற்றிக்கு அருகில் கொண்டு சென்ற விராட் கோலியிடமிருந்து கேப்டனாக தான் இன்னும் அதிகம் எதிர்பார்ப்பதாக கங்குலி தெரிவித்துள்ளார்.
புஜாராவை உட்காரவைத்ததை நேரடியாகக் குறிப்பிடாமல், கங்குலி இன்ஸ்டாகிராமில் கூறும்போது, பேட்ஸ்மென்களை நீக்கும் போது போதிய வாய்ப்பளித்திருக்கிறோமா என்பதை கோலி பரிசீலிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கேப்டனாக இருந்தால் வெற்றி பெற்றால் எப்படி வாழ்த்துகிறார்களோ அதே போல் தோல்வியடைந்தால் விமர்சிக்கவே செய்வார்கள். கோலி மீது ஒரு விமர்சனம் என்னவெனில் பேட்ஸ்மென்களை நீக்கும் முன் அவர்களுக்கு சீராக போதிய வாய்ப்புகளை வழங்கியிருக்கிறோமா என்பதை அவர் பரிசீலிக்க வேண்டும்.
கேப்டன் தான் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும். இது அவர் அணி, எனவே அவர்தான் வீரர்களின் மனநிலையை மாற்ற வேண்டும். அவர்களுடன் அமர்ந்து தான் செய்ய முடியும் போது அவர்களாலும் முடியும் என்று ஊக்கமளிக்க வேண்டும்.
அவர்களுக்கு போதிய கால அவகாசம் அளித்து அணியில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று கூறி அவர்கள் மனதில் இருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டும் விராட் கோலி. எப்பப்பார்த்தாலும் வீரர்களை நீக்குவதும் எடுப்பதுமாக இருந்தால் அவர்கள் மனதில் பயம் வந்து சுதந்திரமாக ஆட முடிவதில்லை. இதனாலேயே சமீப காலங்களில் அணி நிர்வாகத்தின் நம்பிக்கையை அவர்களால் காப்பாற்ற முடியாமல் போகிறது.
கடந்த காலங்களின் சிறந்த அணிகளின் வெற்றிக்கு ஒரு காரணத்தை நாம் அடையாளம் காண முடியும். ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என்று எதுவாக இருந்தாலும் அல்லது இந்திய அணி (2007-ல் இங்கிலாந்தில் வென்றது)ஆக இருந்தாலும் வீரர்கள் டெஸ்ட், ஒருநாள் இரண்டிலும் ஆடினர். எனவே ஓரிரண்டு போட்டிகளில் சரியாக ஆடாவிட்டாலும் அடுத்த போட்டிகளில் மீண்டெழ வாய்ப்பு கிடைத்தது. முதல் தர கிரிக்கெட்டில் ஆடி 150 ரன்களைக் குவித்தாலும் அது சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஈடுகாணாது. விராட் கோலி தவிர மற்ற வீர்ர்கள் யாரும் 3 வடிவங்களிலும் ஆடுவதில்லை.
இவ்வாறு கூறினார் கங்குலி.
கங்குலி கூறியதற்கான காரணம்:
தென் ஆப்பிரிக்காவில் 2 இன்னிங்ஸ்கள் தவண் சரியாக ஆடாததால் உடனே ராகுல் கொண்டு வரப்பட்டார். ரஹானே இந்தியாவின் துணைத்தலைவர் ஆனால் 2 டெஸ்ட்களுக்கு உட்கார வைக்கப்பட்டார், 3வது டெஸ்ட் போட்டிக்குக் கொண்டு வரப்பட்டார். முன்னதாக இலங்கைக்கு எதிரான உள்நாட்டு தொடரில் கொல்கத்தாவில் முதல் டெஸ்ட்டுக்கு விஜய் இல்லை. பிறகு 2வது டெஸ்ட் போட்டிக்கு விஜய் வந்தார். எட்ஜ்பாஸ்டனில் புஜாரா நீக்கப்பட்டு 3 தொடக்க வீரர்கள் அணியில் இருந்தனர்.
இதற்கு முன்னதாகவும் புஜாரா நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. டாப் 3 என்பதை அளவுக்கு அதிகமாக யோசித்து விஜய், தவண், புஜாரா என்று சீராக வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை என்பது கங்குலியின் நியாயமான குற்றச்சாட்டாகவே படுகிறது.