Ultimate magazine theme for WordPress.

பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கத்துக்குத் தொடர்ந்து தடைபோடும் கரோலின்; வெள்ளியுடன் விடை பெற்றார் சிந்து

சீனாவில் நடந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரினிடம் போராடி தோற்று வெள்ளிப்பதக்கத்தோடு விடைபெற்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.
சீனாவின் நான்ஜிங் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்த்து மோதினார் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து.
இதற்கு முன் இதுவரை இருவரும் 11 முறை மோதி இருந்தனர். அதில் சிந்து 6 முறையும், கரோலின் மரின் 5 முறையும் வென்றிருந்தனர். இதனால், ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது.
பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்துவை 21-19, 20-10 என்ற நேர்செட்களில் எளிதாகத் தோற்கடித்தார் கரோலின் மரின்.
முதல் செட்டில் கரோலினுக்கு கடும்நெருக்கடி கொடுத்து விளையாடினார் சிந்து, தொடக்கத்தில் புள்ளிக்கணக்கில் முன்னிலைப் பெற்று பயணித்த சிந்துவால், கரோலின் அதிரடி ஷாட்களுக்கும், ப்ளேஸ்களுக்கும், சர்வீஸ்களுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. பல முறை சிந்துவும், சரிசமமான புள்ளிகளை எட்டியபோதிலும், கரோலின் இறுதியாக 21-19 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.
2-வது செட்டில் முற்றிலும் ஆட்டத்தைத் தனது கையில் எடுத்துக்கொண்டு கரோலின் விளையாடினார். மிகுந்த போராட்டம் குணம் கொண்டவராக கருதப்படும் சிந்து, 2-வது செட்டில் கரோலினின் அனல்பறந்த ஆட்டத்தின் முன் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. முடிவில் 20-10 என்ற கணக்கில் சிந்துவை சாய்த்தார் கரோலின்.
இதுவரை 2014,2015 ஆண்டுகளில் இருமுறை உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ள கரோலினுக்கு இது மூன்றாவது சாம்பியன்ஷிப் பட்டமாகும்.
அதேசமயம், இந்திய வீராங்கனை சிந்து, 2013, 2014ம் ஆண்டுகளில் வெண்கலப்பதக்கத்தையும், கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடந்த போட்டியில் வெள்ளிப்பதக்கத்தையும் சிந்து வென்றார்.
கடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் சிந்துவின் தங்கப் பதக்க கனவை கரோலின் மரின்தான் தட்டிப்பறித்தார். இப்போதும், சிந்துவின் தங்கக் கனவை மரின் சிதைத்துவிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.